வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி - 2 பேர் கைது


வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி - 2 பேர் கைது
x

வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏர்டெல் தொலைத்தொடர்பு அலுவலகத்தின் நோடல் அலுவலர் ஜெயகுமார் என்பவர் பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் அவர், "பல்லாவரம் பகுதியில் சட்டவிரோதமாக தங்கள் நிறுவனத்தின் தொலைத்தொடர்பை பயன்படுத்தி வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருவதாக" கூறி இருந்தார். மேலும் அவர்கள் கொடுத்த விவரங்களை வைத்து போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணையில் பல்லாவரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் தொழில் நுட்பத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதேபோல் பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, தாழம்பூர் ஆகிய பகுதிகளில் தங்கி தொழில்நுட்ப சாதனைங்களை பயன்படுத்தி போலியாக சிம்கார்டை செயல்பட செய்து சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து பல்லாவரத்தில் தங்கி இருந்த கேரளாவை சேர்ந்த பாஹத் முகமது (வயது 25) மற்றும் சித்தாலபாக்கத்தில் தங்கியிருந்த சாஹல் (25) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர், ரவுட்டர், 1200-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கடந்த 5 மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான முகம் தெரியாத நபர் மூலம் இதனை கற்றுக்கொண்டு, வெளிநாட்டு அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி வந்துள்ளனர். மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம், மற்ற வசதிகள் செய்து தருவதாக கூறியதன்பேரில் அவர்களுக்காக சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

கைதான 2 பேர் மீதும் கூட்டுச்சதி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story