முதியவரிடம் போலி நகை கொடுத்து மோசடி


முதியவரிடம் போலி நகை கொடுத்து மோசடி
x
தினத்தந்தி 2 July 2023 11:34 PM IST (Updated: 3 July 2023 1:53 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காட்டில் முதியவரிடம் போலி நகையை கொடுத்து மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை

ஆற்காடு,

முதியவர்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் கஜபதி (வயது 82). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆற்காடு சென்றுள்ளார். ஆற்காட்டில் உள்ள அண்ணா சிலை அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மூன்று நபர்கள் அவரிடம் பேச்சுக்கொடுத்துள்ளனர்.

அவர்கள் தாங்கள் வைத்திருந்த நகைகளை காட்டி இவை தங்கம் மற்றும் வைரத்தினால் ஆன விலை உயர்ந்த பொருட்கள். கையில் காசு இல்லாததால் இதனை விற்கப்போகிறோம். நீங்கள் பணம் வைத்திருந்தால், இந்த நகையை வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.

போலி நகையை கொடுத்து மோசடி

இதை உண்மை என நம்பிய கஜபதி தன்னிடத்தில் பணம் இல்லை என்று கூறிவிட்டு, தனது கையில் போட்டிருந்த தங்க மோதிரத்தை கொடுத்துவிட்டு, அந்த நகையை வாங்கி உள்ளார். பின்னர் ஆற்காட்டில் உள்ள ஒரு அடகு கடைக்கு சென்று அதன் மதிப்பு என்ன என விசாரித்துள்ளார். அதற்கு அந்த கடைக்காரர் இது கவரிங் நகை எனக்கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த முதியவர் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இந்தநிலையில் நேற்று ஆற்காட்டில் உள்ள கண்ணமங்கலம் கூட்ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

3 பேர் கைது

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்தனர். அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் வேலூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (38), சையத் பாஷா (34), நல்ல முகமத் (65) என்பதும், இவர்கள் முதியவர் கஜபதியிடம் போலி நகையை கொடுத்து ஏமாற்றியதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் இதுபோன்று பல இடங்களில் மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.


Next Story