பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி
பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
பணம் முதலீட்டு திட்டம்
தஞ்சை மாவட்டம் சீனிவாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் கொடுத்த புகார் மனுவில், தஞ்சை புதிய பஸ் நிலையம் பகுதியில் முருகேசன் என்பவா் ஐஸ்வர்யா குரூப்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில் நகைச்சீட்டு திட்டம், தங்க முதலீடு திட்டம், பணம் இரட்டிப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களில் சேர்ந்தால் 20 மாதங்களில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.
பொருளாதார குற்றப்பிரிவில் புகார்
அதன்பேரில், ஏராளமானோர் முதலீடு செய்தோம். ஆனால் முதிர்வு தேதி முடிந்து பல மாதங்கள் ஆகியும் பணமோ, நகையோ எதையும் தராமல் கொரோனாவை காரணம் காட்டி நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டனர். இது தொடர்பாக முருகேசனை சந்தித்து கேட்டபோது, தஞ்சை, திருச்சி, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மனைகள் தருவதாக கூறினார். அதற்கான பத்திரப்பதிவு, ஆவண செலவு என மேலும் சில லட்சங்களை வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார். ஆகவே இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, "தற்போது சுமார் 20 பேர் மட்டும் திருச்சிக்கு புகார் மனு அளிக்க வந்துள்ளோம். எங்களது பணம் மட்டும் மொத்தமாக கிட்டத்தட்ட ரூ.2½ கோடி வரை மோசடி நடந்துள்ளது. இதேபோல் இன்னும் ஏமாந்தவர்கள் பலர் உள்ளனர்" என்று கூறினார்கள்.