இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி; 6 பேர் கைது


இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி; 6 பேர் கைது
x

இந்து அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த 6 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

அரசு வேலை

கோவை அருகே கொண்டையம் பாளையத்தை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (வயது 56). இவர் தனது மகளுக்கு வேலை தேடி வந்துள்ளார். அப்போது அவரின் வீட்டின் அருகே குடியிருந்த 7 பேர் தங்களை அரசு அதிகாரிகள், அரசு டிரைவர்கள் என்று கூறி அறிமுகம் ஆகினர். மேலும் தங்களால் அரசு வேலை வாங்கி தர முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

இதை உண்மை என்று நம்பிய சந்தானகிருஷ்ணன் தனது மகளுக்கு வேலை வாங்கி தரும்படி கேட்டு உள்ளார். அதற்கு அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அவர் பல்வேறு தவணைகளில் ரூ.21 லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்து உள்ளார். அதன்பிறகு அவர்கள் சந்தானகிருஷ்ணனிடம் பணி நியமன ஆணையை கொடுத்தனர். ஆனால் அந்த பணி நியமன ஆணை போலியானது என்பது தெரியவந்தது.

முதல்-அமைச்சர் அலுவலக ஐ.ஏ.எஸ். அதிகாரி

இதனால் அதிர்ச்சியடைந்த சந்தானகிருஷ்ணன் இதுகுறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது திண்டுக்கல்லை சேர்ந்த ஜி.சரவணக்குமார், ஈரோடு மாவட்டம் பவானிசாகரை சேர்ந்த ஜவகர் பிரசாத் (29), தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த அன்பு பிரசாத் (39), தர்மபுரி மாவட்டம் நிர்மலா நகரை சேர்ந்த என்.எஸ்.சரவணக்குமார் (33), கடலூர் பன்ருட்டியை சேர்ந்த சதிஷ்குமார் (33), கோவை பெரியநாயக்கன்பாளையம் ஆர்.ஆர்.நகரை சேர்ந்த சுதாகர் (37), சுரேந்திரன் (34) ஆகிய 7 பேர் என்பதும், இவர்கள் கோவையில் உள்ள மில்லில் பணியாற்றியதும், இதனால் நண்பர்கள் ஆனதும் தெரியவந்தது.

பின்னர் மில் வேலையை விட்டு நின்றுவிட்டு ஜி.சரவணக்குமார் தன்னை தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அலுவலக அதிகாரி என்றும், ஜவகர் பிரசாத் முதல்-அமைச்சாின் அலுவலக ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், அன்பு பிரசாத் முதல்-அமைச்சர் அலுவலக இன்ஸ்பெக்டர் என்றும், என்.எஸ்.சரவணக்குமார் முதல்-அமைச்சர் அலுவலக தாசில்தார் என்றும், சதிஷ்குமார், சுரேந்திரன், சுதாகர் ஆகியோர் அதிகாரி ஜி.சரவணக்குமாரின் கார் டிரைவர்கள் என்றும் பலரிடம் அறிமுகம் ஆகி இந்து அறநிலையத்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததும் தெரியவந்தது. சுதாகர், சுரேந்திரன் ஆகியோர் அண்ணன், தம்பிகள் ஆவார்கள்.

6 பேர் கைது

இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில், தனிப்படை போலீசார் ஓசூர், பவானி, கோவையில் பதுங்கி இருந்த ஜவகர் பிரசாத், அன்பு பிரசாத், என்.எஸ்.சரவணக்குமார், சதிஷ்குமார், சுரேந்திரன், சுதாகர் ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர்.

பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய ஜி.சரவணக்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story