பழைய நகைகளை டெபாசிட் செய்தால் புதிதாக தருவதாக மோசடி- போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்


பழைய நகைகளை டெபாசிட் செய்தால் புதிதாக தருவதாக மோசடி- போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
x

பழைய நகைகளை டெபாசிட் செய்தால் புதிதாக தருவதாக கூறி நூதன மோசடி செய்ததாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை


புதிய நகை

மதுரை மேலமாசி வீதியில் பிரபல நகைக்கடை உள்ளது. இந்த கடையில் பழைய நகையை டெபாசிட் செய்தால் அதற்கு பதிலாக ஓராண்டுக்கு பிறகு புதிய நகை மற்றும் தங்க காசுகள் தருவதாக வாடிக்கையாளர்களிடம் தெரிவித்து இருந்தனர். அதை அறிந்து வாடிக்கையாளர்கள் அதிகமானோர் தங்கள் நகைகளை கடைகளில் கடந்த ஆண்டு டெபாசிட் செய்தனர். அந்த நகைகளை திருப்பி கொடுக்கும் காலம் வரும் போது கடையில் உள்ளவர்கள் காலம் தாழ்த்தி வந்தனர்.

எனவே 100-க்கும் மேற்பட்டவர்களிடம் இதே போன்று நகைகளை வாங்கி பல கோடி ரூபாய் மதிப்பில் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் கடந்த சில நாட்களாக கடைக்கு சென்று தகராறு செய்து வந்தனர்.

புகார்

இந்த நிலையில் நகைக்கடை எவ்வித அறிவிப்பும் இன்றி திடீரென்று மூடப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து புகார் அளிக்க திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் நேற்று மதுரை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

இதுகுறித்து வாடிக்கையாளரான நிலையூரை சேர்ந்த கீர்த்திகா தெரிவிக்கும் போது, மேலமாசிவீதியில் உள்ள ஒரு நகை கடையில் கடந்தாண்டு நகை வாங்க சென்றேன்.

அப்போது பழைய நகையை டெபாசிட் செய்தால் ஒரு ஆண்டுக்கு பிறகு புதிய நகை மற்றும் அதற்கு வட்டி தொகையாக 3 கிராம் தங்க காசு தருவதாக தெரிவித்தனர். அதனை நம்பி 48 கிராம் நகையை கடையில் கொடுத்து வைத்தேன். அதற்கான காலம் வந்த பிறகு கடைக்கு சென்று கேட்டால் காலம் தாழ்த்தி வந்தனர். தற்போது கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். என்னை போன்று பலர் நகைகளை அங்கு டெபாசிட் செய்துள்ளனர். எனவே எங்கள் நகைகளை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் நகைக்கடைக்காரர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story