பேராசிரியையிடம் நகை, பணம் மோசடி


பேராசிரியையிடம் நகை, பணம் மோசடி
x

சமூகவலைதளம் மூலம் பழகி பேராசிரியையிடம் 58 பவுன் நகை, பணத்தை மோசடி செய்த சென்னையை சேர்ந்தவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

வேலூர்

காட்பாடி வைபவ்நகரை சேர்ந்த பெண் ஒருவர் வேலூரில் உள்ள கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு சமூக வலைத்தளம் மூலம் சென்னையை சேர்ந்த புவனேஷ் (வயது 37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பரிமாறி வந்தனர்.

இந்த நிலையில் புவனேஷ் தனக்கு கடன் தொல்லை அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். அதனால் அந்த பெண் தன்னிடம் இருந்த 58 பவுன் நகைகள், பணம் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

சில நாட்கள் கழித்து கொடுத்த நகை, பணத்தை பேராசிரியை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணம், நகைகளை கொடுக்காமல் அந்த பெண்ணுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story