குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி வாலிபரிடம் ரூ.1½ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அதிக லாபம்
விழுப்புரம் அருகே உள்ள பனப்பாக்கத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 35). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டெலிகிராம் ஐடியில் இருந்து தொடர்புகொண்டு பகுதிநேர வேலை விஷயமாக பேசி ஒரு லிங்கை அனுப்பி அந்த லிங்கிற்குள் சென்று அதில் வரும் வீட்டு உபயோக பொருட்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் குறிப்பிட்ட தொகை பெறலாம் எனக்கூறினார்.
உடனே பார்த்திபன், அந்த லிங்கிற்குள் சென்று தனது விவரங்களை கொடுத்து தனக்கென பயனர் முகவரி, பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவேற்றம் செய்து அவர் கூறியவாறு செய்ததற்கு ரூ.1,013-ஐ பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த நபர், பார்த்திபனை தொடர்புகொண்டு சிறிய தொகையை முதலீடு செய்து 5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார்.
ரூ.1½ லட்சம் மோசடி
இதை நம்பிய பார்த்திபன், தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து ரூ.10,077-ஐ செலுத்தி அன்றே ரூ.18 ஆயிரமாகவும், ரூ.26 ஆயிரத்தை முதலீடு செய்து ரூ.31,150-ஆகவும் திரும்பப்பெற்றார். அதன் பிறகு பார்த்திபன், அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்தை 2 தவணைகளாக அனுப்பி வைத்தார். ஆனால் டாஸ்க் முடித்த பின்பும் பார்த்திபனுக்கு சேர வேண்டிய தொகையை திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.
இதுகுறித்து பார்த்திபன், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.