கடன் தருவதாக கூறி டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி
கடன் தருவதாக கூறி டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த 48 வயது லாரி டிரைவர் ஒருவருடைய முகநூலுக்கு தகவல் ஒன்று வந்தது. அதில் பிரபல நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.10 லட்சம் கடன் தருவதாக கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய லாரி டிரைவர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதில் பேசிய மர்ம நபர் அவரிடம், ரூ.10 லட்சம் கடன் வேண்டும் என்றால் அதற்கான ஜி.எஸ்.டி. மற்றும் செயலாக்க கட்டணம் போன்ற பல பரிவர்த்தனைகளுக்காக பணம் செலுத்துமாறு கேட்டார். இதை உண்மை என நம்பிய அந்த லாரி டிரைவர் மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் செலுத்தினார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இந்த மோசடி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.