பேப்பர் பிளேட் கட்டிங் எந்திரம் தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2½ லட்சம் மோசடி
பேப்பர் பிளேட் கட்டிங் எந்திரம் தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2½ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விவசாயி
மேல்மலையனூர் தாலுகா கோவில்புரையூரை சேர்ந்தவர் இளம்பரிதி (வயது 30), விவசாயி. இவர் தனது ஆன்ட்ராய்டு செல்போனில் யூ-டியூப்பை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சேனலில் பேப்பர் பிளேட் கட்டிங் எந்திரம் குறைந்த விலையில் கிடைக்கும் என்று வந்தது. பின்னர் அதில் தொடர்புக்கு என்று குறிப்பிட்டிருந்த செல்போனை இளம்பரிதி தொடர்புகொண்டு பேசியபோது, எதிர்முனையில் பேசிய நபர், இளம்பரிதியிடம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை செலுத்தினால் 3 கட்டிங் எந்திரங்களை அனுப்பி வைப்பதாக கூறினார்.
ரூ.2½ லட்சம் மோசடி
இதை நம்பிய இளம்பரிதி, தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட போன்பே மூலம் ரூ.80 ஆயிரத்தையும், தனது நண்பர்களிடம் கடன் கேட்டு அவர்களது போன்பே மூலம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தையும் ஆக மொத்தம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கி கணக்கிற்கு 8 தவணைகளாக அனுப்பி வைத்தார். ஆனால் பணத்தை பெற்ற மர்ம நபர், இளம்பரிதிக்கு கட்டிங் எந்திரம் ஏதும் அனுப்பி வைக்காமலும், பணத்தை திருப்பித்தராமலும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.
இதுகுறித்து இளம்பரிதி, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.