போலி தடையில்லா சான்றிதழ் வழங்கி ரூ.27 லட்சம் மோசடி


போலி தடையில்லா சான்றிதழ் வழங்கி ரூ.27 லட்சம் மோசடி
x

தஞ்சையில் போலி தடையில்லா சான்றிதழ் வழங்கி ரூ.27 லட்சம் மோசடி செய்த நிதிநிறுவன மேலாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்

நிதிநிறுவனம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா பொன்னாப்பூர் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.7½ லட்சம் கடன் பெற்றார். அந்த நிறுவனத்தில் அசல் மற்றும் வட்டியுடன் கடன் தொகை முழுவதையும் ராஜ்குமார் கட்டினார். பின்னர் கடன் முழுவதும் கட்டியதற்கான தடையில்லா சான்றிதழை நிதிநிறுவனத்திற்கு சென்று ராஜ்குமார் கேட்டுள்ளார்.

சான்றிதழ்

அப்போது அவரது செல்போனுக்கு, பணத்தை வசூல் செய்யும் மேலாளராக இருந்தவர் தடையில்லா சான்றிதழை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். அந்த சான்றிதழை தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ராஜ்குமார் கொண்டு சென்று கொடுத்த போது, அது போலியானது என்பது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்திடம் தனக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களை காண்பித்து கேட்ட போது, அதிகாரிகளும் தடையில்லா. சான்றிதழை பரிசோதித்துப் பார்த்து விட்டு, சான்றிதழ் போலியாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து, நிதி நிர்வாகம் நடத்திய விசாரணையில், வாகன கடன் வாங்கிய 17 பேரிடம், அவர்கள் செலுத்திய கடன் தொகை ரூ.27 லட்சத்தை வங்கி கணக்கில் வரவு வைக்காமல், பணத்தை வசூல் செய்யும் மேலாளராக பணியாற்றியவர் போலியான தடையில்லா சான்றிதழ் மற்றும் ரசீதுகளை வழங்கி மோசடி செய்தது தெரிந்தது. இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், நிதிநிறுவன முதன்மை மேலாளர் புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதிநிறுவன மேலாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story