தனியார் நிறுவன உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.27 லட்சம் மோசடி
தனியார் நிறுவன உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.27 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த விவேகானந்தா நகரை சேர்ந்தவர் நாகராஜு (வயது 46). பா.ஜ.க. பிரமுகரான இவர் நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்த நிறுவனம், இழப்பை சந்தித்ததால் நிறுவனத்தை நிரந்தரமாக மூட எண்ணி, அதன் பேரில் பெற்றிருந்த, மதிப்பு கூட்டு வரி உரிமத்தை கடந்த 2014-ம் ஆண்டு உரிய முறையில் சமர்ப்பித்து விட்டார்.
இந்த நிலையில், நிலுவையில் உள்ள வரி பாக்கியான ரூ.27 லட்சத்து 24 ஆயிரத்து 783-ஐ உடனடியாக செலுத்த வேண்டும் என சமீபத்தில், மதிப்பு கூட்டு வரி துறை சார்பில் இவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரடியாக சந்தித்தார்.
அப்போது அவரது மதிப்பு கூட்டு வரி எண்ணை பயன்படுத்தி மர்மநபர்கள் வரி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் நாகராஜு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.