நூதனமுறையில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் மோசடி


நூதனமுறையில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 25 Oct 2023 8:00 PM GMT (Updated: 25 Oct 2023 8:00 PM GMT)

வேடசந்தூரில் ஏ.டி.எம். கார்டை ‘ஆக்டிவேஷன்’ செய்து தருவதாக கூறி, நூதனமுறையில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். பணத்தை இழந்த பெண், வங்கி முன்பு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

ரூ.40 ஆயிரம் கடன்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பாலப்பட்டி ஊராட்சி வள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி அஞ்சலி (26). இவர், வேடசந்தூர் ஆத்துமேடு கரூர் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கினார்.

இந்தநிலையில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் கிடைத்த ரூ.40 ஆயிரம் கடன் தொகை, அஞ்சலியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அந்த பணத்தை எடுப்பதற்காக தனது கணவர் ராஜ்குமார், 2 குழந்தைகளுடன் அஞ்சலி நேற்று காலை வங்கிக்கு வந்தார்.

அங்கிருந்த அதிகாரிகள், வங்கியின் முன்பு உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணத்தை எடுத்து செல்லுமாறு அஞ்சலியிடம் அறிவுறுத்தினர். சமீபத்தில் தான் அஞ்சலிக்கு புதிய ஏ.டி.எம். கார்டு வந்திருந்தது. அது, 'ஆக்டிவேஷன்' செய்யப்படாமல் இருந்தது.

ஏ.டி.எம். கார்டு 'ஆக்டிவேஷன்'

இதனையடுத்து ஏ.டி.எம். மையத்துக்கு அஞ்சலி கார்டுடன் சென்றார். அவரது குழந்தைகளுடன் கணவர் வெளியே நின்று கொண்டிருந்தார். புதிய ஏ.டி.எம். கார்டு என்பதால், அதனை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் அஞ்சலி தவித்து கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அஞ்சலியிடம் அவர், ஏ.டி.எம். கார்டை 'ஆக்டிவேஷன்' செய்து பணத்தை எடுத்து தருவதாக கூறினார். இதனை நம்பிய அஞ்சலி, ஏ.டி.எம். கார்டை அந்த வாலிபரிடம் கொடுத்தார்.

அதன்பிறகு ஏ.டி.எம். எந்திரத்துக்குள் கார்டை வாலிபர் செலுத்தினார். இதைத்தொடர்ந்து அஞ்சலியின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. செல்போனை வாங்கி, அதில் வந்த குறுந்தகவலை பார்த்து ஏ.டி.எம். கார்டை அவர் 'ஆக்டிவேஷன்' செய்து விட்டார்.

கார்டை மாற்றி கொடுத்த வாலிபர்

பின்னர் அந்த வாலிபர், அஞ்சலியின் கார்டை அவர் வைத்து கொண்டார். அதற்கு பதிலாக, தான் மறைத்து வைத்திருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டு ஒன்றை அஞ்சலியிடம் கொடுத்தார். அஞ்சலியும், அதனை தனது கார்டு தான் என்று நினைத்து வாங்கி வைத்து கொண்டார்.

அதன்பிறகு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வேண்டும் என்றால், வங்கியில் ஒரு ஓ.டி.பி. எண் தருவார்கள். அதனை வாங்கி வாருங்கள் என்று அஞ்சலியிடம் அந்த வாலிபா் கூறினார். இதனையடுத்து அஞ்சலி வங்கிக்கு சென்றார். அந்த வாலிபரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.

நூதன மோசடி

இதற்கிடையே வங்கிக்கு சென்ற அஞ்சலி அதிகாரிகளிடம் கேட்டார். அப்போது சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுத்திருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அஞ்சலி அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் அந்த வாலிபர் தன்னிடம் கொடுத்த கார்டு தன்னுடையது அல்ல என்பதை அறிந்தார். உதவி செய்வது போல நடித்து, அந்த வாலிபர் நூதனமுறையில் பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

கதறி அழுத பெண்

தனிநபர் ஒருவரிடம் வட்டிக்கு தான் வாங்கிய கடனை செலுத்துவதற்காக, சுய உதவிக்குழு மூலம் கடன் வாங்கியதாகவும், அந்த தொகையும் பறி போய் விட்டதே என்று வங்கியின் முன்பு அஞ்சலி கதறி அழுதார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தாயின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்ததை கண்ட பச்சிளங்குழந்தைகளும் அழுதனர். இதேபோல் ராஜ்குமாரின் கண்களும் குளமானது. குடும்பத்தோடு கலங்கி நின்ற இந்த காட்சியை பார்த்து, வங்கிக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களும் வேதனை அடைந்தனர்.

போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் அஞ்சலி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், வேடசந்தூர் சாலைத்தெருவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தில் அஞ்சலியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தை அந்த வாலிபர் எடுத்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், அந்த நபரின் புகைப்படத்தை ஆய்வு செய்தனர். அதில், அவரது உருவம் பதிவாகி இருந்தது. அதனை அஞ்சலியிடம் காட்டினர். அவரும், அந்த நபர் தான் தன்னிடம் மோசடியில் ஈடுபட்டவர் என்று அடையாளம் காட்டி உள்ளார். அந்த புகைப்படத்தை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வங்கியில் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் கணக்கு வைத்துள்ளனர்.

இவர்களுக்கு புதிதாக ஏ.டி.எம். கார்டை 'ஆக்டிவேஷன்' செய்ய தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே வங்கி நிர்வாகம் சார்பில், கிராமப்புற மக்களுக்கு உதவி செய்ய தனியாக ஊழியரை நியமித்து இருக்க வேண்டும்.

அப்படி செய்திருந்தாலோ அல்லது காவலாளி நியமிக்கப்பட்டிருந்தாலோ அஞ்சலி போன்ற கிராமப்புற பெண்கள், இதுபோன்று பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக எதிரொலிக்கிறது.


Next Story