தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7.16 லட்சம் மோசடி
பிரதம மந்திரியின் திட்டத்தில் கடன் பெற்று தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7.16 லட்சம் மோசடி சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை
பிரதம மந்திரியின் திட்டத்தில் கடன் பெற்று தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7.16 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர்
கோவை கணபதி மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் அருண் (வயது 47). தனியார் நிறுவன ஊழியர். இவரது செல்போன் எண்ணுக்கு சில நாட்களுக்கு முன்பு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
அதில் பாரத பிரதம மந்திரியின் நிதி உதவி திட்டத்தின் கீழ் வியாபார கடன் ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை குறைந்த வட்டியில் வழங்குவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து அதில் குறிப்பிட்டு இருந்த எண்ணுக்கு அருண் தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் பேசியவர் தனது பெயர் காயத்ரி என்றும், பிரதம மந்திரியின் கடன் உதவி திட்டத்தின் கீழ் கடன் பெற ஆதார் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை அனுப்புமாறு கூறினார்.
ரூ.7.16 லட்சம் மோசடி
பின்னர் அந்த பெண், அவரை தொடர்பு கொண்டு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்க முடியும். அதற்காக இன்சூரன்ஸ், ஜி.எஸ்.டி., சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். அதை நம்பிய அருண், அந்த பெண் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.7 லட்சத்து 16 ஆயிரம் அனுப்பியதாக தெரிகிறது.
ஆனால் அந்த பெண் கூறியபடி அருணுக்கு கடன் தொகை எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர், அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.