திருச்சியில் பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி
திருச்சியில் பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
பரிசு விழுந்திருப்பதாக கூறி...
திருச்சி தென்னூர் இனாம்தார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சேக் இர்பான். இவரது தாயாரின் செல்போனுக்கு கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. போனில் பேசிய மர்ம நபர், ஒரு நிறுவனத்தின் பெயரை கூறி, அதில் நீங்கள் வாடிக்கையாளராக உள்ளீர்கள். இதனால் உங்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு விழுந்துள்ளது.
மேலும் பரிசுத்தொகையை பெற ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும். அதற்காக குறிப்பிட்ட தொகையை அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய இர்பானின் தாயார் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு முதலில் குறிப்பிட்ட தொகையை அனுப்பினார். ஆனால் அந்த நபர் பல்வேறு காரணங்களை கூறி மீண்டும் பணம் அனுப்ப கூறியதால் கொஞ்சம், கொஞ்சமாக மொத்தம் ரூ.9 லட்சத்து 9 ஆயிரத்து 900-ஐ ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார்.
போலீசார் விசாரணை
அதன்பின்னர் பல நாட்களாகியும் பரிசுத்தொகை வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் தனது மகன் இர்பானிடம் கூறினார். இது குறித்து இர்பான் திருச்சி மாநகர சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.