என்ஜினீயர் உள்பட 2 பேரிடம் ரூ.21¾ லட்சம் மோசடி
மாவட்டத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.21¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேரிடம் ஆன்லைன் மூலம் ரூ.21¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.15¾ லட்சம் மோசடி
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய என்ஜினீயர் ஒருவரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த மாதம் குறுந்தகவல் வந்தது. அதில் ஓட்டல் அறைகளுக்கான மதிப்பாய்வு மற்றும் மதிப்பீடு போன்ற வேலை உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த தகவல் அனுப்பிய மர்ம நபருக்கு தொடர்பு கொண்டு என்ஜினீயர் பேசினார்.
அதைத்தொடர்ந்து மர்ம நபர் அவருக்கு வேலைவாய்ப்புக்கான இணைப்பை அனுப்பினார். இதை என்ஜினீயர் இணையதளத்தில் பதிவு செய்தவுடன் அவருக்கு ரூ.210 கிடைத்தது. மேலும் என்ஜினீயர் அந்த வேலையை செய்து ரூ.1,000 முதலீடு செய்து ரூ.1,410 பெற்றார். தொடர்ந்து அவர் பல பரிவர்த்தனைகள் மூலம் ரூ.15 லட்சத்து 71 ஆயிரத்து 740-யை முழுமையாக முதலீடு செய்தார்.
போலீசார் விசாரணை
ஆரம்பத்தில் அவருக்கு கமிஷன் தொகையாக ரூ.1,220 கிடைத்தது. அதன்பிறகு அவருக்கு எந்த தொகையும் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த என்ஜினீயர் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் இந்த மோசடி தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் ஓமலூர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய வாலிபரிடம் ஆன்லைன் மூலம் ரூ.6 லட்சத்து 9 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.