தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் தருவதாக கூறி சரக்கு வாகன டிரைவரிடம் ரூ.3 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் தருவதாக கூறி சரக்கு வாகன டிரைவரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா தடாகம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 28), சரக்கு வாகன டிரைவர். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர், தான் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், ரூ.9 லட்சம் கடன் தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய செல்வத்திடம், கடன் பெறுவதற்கு விண்ணப்ப கட்டணம், ஆவண கட்டணம், இ.எம்.ஐ., வரி ஆகியவற்றுக்காக பணம் கட்டுமாறு அந்த நபர் கூறியதோடு 4 வங்கி கணக்கு எண்ணையும் அனுப்பியுள்ளார். உடனே செல்வம், அந்த நபர் கூறியவாறு அவர் அனுப்பிய 4 வங்கி கணக்குகளுக்கு தனது கூகுள்பே மூலமாகவும், தனது நண்பர் ஒருவரின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே மூலமாகவும் ரூ.3 லட்சத்து 600-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தை பெற்ற அந்த மர்ம நபர், செல்வத்துக்கு கடன் ஏதும் தராமல் காலம் தாழ்த்தி வந்ததோடு மேலும் பணம் கட்ட சொல்லியுள்ளார். இதனால் செல்வம், அந்த நபரை தொடர்புகொண்டு தனக்கு கடன் ஏதும் தேவையில்லை என்றும் தான் செலுத்திய பணத்தை திருப்பித்தருமாறும் கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை, சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.






