மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்


மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
x

ஆலங்குடி, அறந்தாங்கி, கொத்தமங்கலத்தில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

புதுக்கோட்டை

சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

ஆலங்குடி அருகே அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் பாண்டியன் தலைமை தாங்கினார். அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் ராஜேஸ்வரி வரவேற்றார். திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், அரையப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவர்கள் 54 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் வடிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிங்காரம், ஒன்றிய கவுன்சிலர் பெரியசாமி, வக்கீல் ராமச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு மற்றும் கிராமமக்கள், அரசு அதிகாரிகள், பள்ளி அலுவலக பணியாளர்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அறந்தாங்கி அருகே பூவைமாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். முன்னதாக அதே பள்ளி வளாகத்தில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

வகுப்பறைகள் திறப்பு விழா

அறந்தாங்கி தாலுகா சிலட்டூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 14 லட்சத்தில் 4 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடம் அடங்கிய புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தாசில்தார் பாலகிருஷ்ணன். ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் வள்ளியப்பன், பொன்னுச்சாமி, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

கீரமங்கலம்

கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், எம்.எல்.ஏ.வாக சைக்கிள் கொடுத்ததற்காக வழக்கு போட்ட பள்ளியிலேயே அமைச்சராக போலீஸ் பாதுகாப்போடு வந்து மாணவர்களுக்கு சைக்கிள் கொடுப்பது பெருமையாக உள்ளது, என்றார்.


Next Story