மனிதநேய பயிற்சி மையம் மூலம் குரூப்-2, 2ஏ முதன்மைத்தேர்வுக்கு இணைய வழியில் இலவச பயிற்சி - சைதை துரைசாமி அறிவிப்பு


மனிதநேய பயிற்சி மையம் மூலம் குரூப்-2, 2ஏ முதன்மைத்தேர்வுக்கு இணைய வழியில் இலவச பயிற்சி - சைதை துரைசாமி அறிவிப்பு
x

மனிதநேய பயிற்சி மையம் மூலம் குரூப்-2, 2ஏ முதன்மைத்தேர்வுக்கு இணைய வழியில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமியை தலைமையாக கொண்டு மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் இந்திய அளவில் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ்., இந்திய வனத்துறை ஆகிய பதவிகளுக்கும், டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-1, 2, 2ஏ பதவிகளுக்கும், சப்-இன்ஸ்பெக்டர், உதவி என்ஜினீயர் பணியிடங்களுக்கும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் இதுவரையில் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில் படித்தவர்களில் 3 ஆயிரத்து 660 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று, மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு உயர் பதவிகளில் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இதுதவிர டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-4 தேர்வுகளுக்கு பயிற்சி பெற்ற 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெற்றி அடைந்து பணியில் உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-2, 2ஏ தேர்வு முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்ததாக முதன்மை தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அதற்கான பயிற்சியை சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம் வழங்க இருக்கிறது.

இதுகுறித்து மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி கூறியதாவது:-

முற்றிலும் புதிய முயற்சியாக முதன்மை தேர்வுக்கான பயிற்சியை இணைய வழியில் மேற்கொள்கிறோம். இது மனிதநேய மாணவர்களின் வளர்ச்சியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக நம்புகிறோம். கொரோனா தொற்று காலத்துக்கு முன்பு வரை எங்கள் பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை சென்னையில் 7 மையங்களில், காலை, மதியம், மாலை என 3 சுழற்சி முறைகளில் பயிற்சி வழங்கினோம். அதில் பயிற்சி பெற்றவர்கள் தேர்ச்சியும் பெற்றனர்.

அந்த வகையில் சிறந்த கல்வி வல்லுனர்கள், எங்கள் மையத்தில் படித்து அரசு பணியில் உள்ளவர்கள், சிறந்த ஆசிரியர்கள் ஆகியோரின் துணையுடன் முதன்மைத்தேர்வுக்கான பயிற்சியை இணைய வழியில் நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளோம். 58 ஆயிரத்து 81 பேருக்கு முதன்மை தேர்வுக்கான பயிற்சி அளிக்க தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். www.mntfreeias.com என்ற மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய இணையதளத்தின் வாயிலாக பயிற்சி வழங்கப்படும்.

மாணவர்கள் பயன்பெறும் வகையில் பாடத்திட்டத்தின் அடிப்படையில் சீரிய இடைவெளியில் பாடக்குறிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்படும். எழுத்து பயிற்சிக்கு மாதிரி வினாத்தாளும் இணையதளம் மூலம் பகிரப்பட்டு, அதற்கான மாதிரி விடைகளையும் அதில் பார்க்க முடியும்.

மேலும் முதன்மை தேர்வுக்கு தயாராகும் பொருட்டு பாடநூல்கள் விவரம், முதன்மைத்தேர்வை அணுகும் முறை, எழுத்துப்பயிற்சி, தேர்வை எதிர்கொள்ள தேவையான உத்திகளும் இணையவழியில் பகிரப்படும்.

4-ந்தேதி (இன்று) முதல் அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி 23-ந்தேதி வரை இந்த பயிற்சிகள் வழங்கப்படும். இந்த பயிற்சி பெற விரும்புபவர்கள் 044-24358373, 24330095, 9840439393 என்ற எண்கள் வாயிலாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், mntfreeias.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story