கட்டணமின்றி செல்ல அனுமதி:கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: உற்சாகமாய் குளித்து மகிழ்ந்தனர்


கட்டணமின்றி செல்ல அனுமதி:கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: உற்சாகமாய் குளித்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:45 PM GMT)

வன உயிரின வார விழாவையொட்டி, கட்டணமின்றி செல்ல அனுமதி வழங்கப்பட்டதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்தனர்.

தேனி

கும்பக்கரை அருவி

பெரியகுளம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதைத்தொடர்ந்து நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் வனக்கோட்டம் சார்பில், வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இதையத்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கும்பக்கரை அருவியில் நேற்று ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் கீழவடகரை ஊராட்சி சார்பில், அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கும் கட்டணம் இன்றி செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் நேற்று கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

மேலும் வாரவிடுமுறை என்பதால் தேனி மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்தனர்.


Next Story