சரக்கு ரெயில் தடம் புரண்டது: 7 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்


சரக்கு ரெயில் தடம் புரண்டது: 7 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
x

கோப்புப்படம்

ரெயில் என்ஜின் பகுதியில் இருந்து 16-வது பெட்டியின் முன்பக்க சக்கரம் ஒன்று தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டது.

திருப்பத்தூர்,

சென்னை துறைமுகத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒயிட் பீல்டுக்கு 41 பெட்டிகளுடன் சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. மாலை 5.30 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையம் பகுதியில் லூப்லைனில் இருந்து மெயின் லைனுக்கு சரக்கு ரெயில் மாறியது.

அப்போது ரெயில் என்ஜின் பகுதியில் இருந்து 16-வது பெட்டியின் முன்பக்க சக்கரம் ஒன்று தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டது. இதனால் அதிக சத்தம் கேட்டு என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதனால் மற்ற பெட்டிகள் தடம் புரளாமல் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் ஹைட்ராலிக் மெஷின் மூலம் தடம் புரண்ட சக்கரங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2½ மணி நேரம் போராடி இரவு 8 மணிக்கு தடம் புரண்ட சக்கரம் சீரமைக்கப்பட்டது.

இதன் காரணமாக சென்னையிலிருந்து கேரள மாநிலம் செல்லும் திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில், லால்பாக் எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்பட 7 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் இந்த ரெயில்களில் பயணம் மேற்கொண்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.


Next Story