பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு


பேச்சிப்பாறை அணையில் இருந்து   உபரிநீர் திறப்பு
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 9:34 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்ததன் எதிரொலியாக பேச்சிப்பாறை அணையில் இ்ருந்து உபரிநீர் வினாடிக்கு 1000 கன அடி திறக்கப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்ததன் எதிரொலியாக பேச்சிப்பாறை அணையில் இ்ருந்து உபரிநீர் வினாடிக்கு 1000 கன அடி திறக்கப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மழை

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையை தொடர்ந்து வடகிழக்கு பருவ மழையும் தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளில் இருந்து அவ்வப்போது உபரிநீர் திறந்து விடப்படுகிறது. அதன்படி பல நாட்கள் தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன் அணையின் மறுகால் மதகுகள் மூடப்பட்டன. இதனால் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து 46 அடியை நெருங்கி வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை அணைப்பகுதியில் 65 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

சிற்றார் 1- 40.6, பெருஞ்சாணி-44.8, சிற்றார் 2-50.2, புத்தன் அணை- 42.6, களியல்- 48, பூதப்பாண்டி- 25.6, கன்னிமார்- 13.6, குழித்துறை- 43, நாகர்கோவில்- 24.4, மயிலாடி- 20.2, சுருளகோடு- 49, தக்கலை- 20, குளச்சல்- 3, இரணியல்- 3, பாலமோர்- 25.4, திற்பரப்பு- 54, மாம்பழத்துறையாறு- 26.4, ஆரல்வாய்மொழி- 17.2, அடையாமடை- 18.2, குருந்தங்கோடு- 22, முள்ளங்கினாவிளை- 42.6, ஆனைக்கிடங்கு- 24, முக்கடல் அணை- 19.1 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.

உபரிநீர் திறப்பு

மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வெள்ள அபாயத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேச்சிப்பாறை அணையிலிருந்து நேற்று மாலை 4 மணிக்கு வினாடிக்கு 1000 கன அடி உபரிநீர் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

அப்போது அணையின் நீர்மட்டம் 45.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாசன மதகுகள் வழியாக வினாடிக்கு750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

பேச்சிப்பாறை உபரிநீர் கோதையாற்றில் கலந்து திற்பரப்புஅருவி வழியாகப் பாயும் நிலையில், திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பொதுப்பணித்துறையினர் செய்திக்குறிப்பு வெளியிட்டு உள்ளனர். அதில், 'மாவட்டத்தில் மீண்டும் கன மழை பெய்யக்கூடும் என வானிலை அறிவிப்புகள் வந்துள்ளது. அதைத்தொடர்ந்து வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில், மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கோதையாறு, குழித்துறை தாமிரபரணியாறுகளில் வெள்ளம் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் ஆறுகளின் அருகில் தேவையின்றி செல்லக்கூடாது' என கூறப்பட்டு உள்ளது.


Next Story