அர்ச்சகர் நியமனத்திற்கு ஆகம விதிகளை பூர்த்தி செய்திருந்தால் போதும்: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


அர்ச்சகர் நியமனத்திற்கு ஆகம விதிகளை பூர்த்தி செய்திருந்தால் போதும்: ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

ஆகம விதிகளை பூர்த்தி செய்யக்கூடிய தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும்போது, பரம்பரை, பரம்பரையாக குறிப்பிட்ட சாதியினரை மட்டும்தான் அர்ச்சகர்களாக நியமிக்க முடியும் என உரிமை கோர முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் பணியிடங்களை நிரப்ப கோவில் செயல் அலுவலர் கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டார். இந்த அறிவிப்பு ஆகம விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி அந்த கோவிலில் பரம்பரை அர்ச்சகராக பணியாற்றி வரும் முத்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.சிங்காரவேலன் தன் வாதத்தில் கூறியதாவது:-

ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர் நியமனமும் கண்டிப்பாக நடைபெற வேண்டும் என ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது.

தள்ளிப்போட வேண்டும்

ஆகம விதிகளை கடைபிடிக்கும் கோவில்களை இனம் கண்டு, அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அந்தக்குழு இதுவரையிலும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. அதுவரை அர்ச்சகர் நியமனங்களை தள்ளிப்போட வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

பரம்பரை நியமனம் இல்லை

இதற்கு பதில் அளித்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் அருண் நடராஜன், ''ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்களைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழுவின் செயல்பாடுகளுக்கு, ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளதால் அந்தக்குழு இன்னும் முழுவீச்சில் இயங்கவில்லை. எனவே, ஆகம விதிகளை கடைபிடிக்கும் கோவில்களில் தலைமை அர்ச்சகர்கள் அளிக்கும் தகுதிச்சான்றின் அடிப்படையில் ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை அரச்சகர்களாக நியமிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

அதேபோல பரம்பரை, பரம்பரையாக அர்ச்சகர்களாக பணிபுரிந்து வருபவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் திருத்தப்பட்ட புதிய விதிகளில் கூறப்படவில்லை'' என்று என வாதிட்டார்.

சொத்துபட்டியல்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்கள் எவை என்பதைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழு இன்னும் தனது பணிகளை தொடங்கவில்லை. அந்தக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை அர்ச்சகர்களை நியமிக்கக்கூடாது என ஐகோர்ட்டு என்று ஒரு உத்தரவும் பிறப்பிக்கவும் இல்லை. பல கோவில்களில் அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அந்தக்குழுவின் அறிக்கைக்காக காத்திருந்தால் அன்றாடம் நடைபெறவேண்டிய பூஜை, அபிஷேகம் போன்றவற்றை தடையின்றி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும்.

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலைப் பொறுத்தமட்டில் 'காரணம் - ஆகமம்' பின்பற்றப்படுவதாக சொத்துப்பதிவேட்டில் உள்ளது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

உரிமை கோர முடியாது

எனவே ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை, குறிப்பிட்ட ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம். அதற்கு எந்தவொரு சாதியும் தடையாக இருக்காது. அதாவது, ஆகம விதிகளை பூர்த்தி செய்யக்கூடிய தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும்போது, பரம்பரை, பரம்பரையாக குறிப்பிட்ட சாதியினரை மட்டும்தான் அர்ச்சகர்களாக நியமிக்க முடியும் என உரிமை கோர முடியாது.

இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் புதிதாக அர்ச்சகர்களை தேர்வு செய்யும் வரை மனுதாரர் பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். பின்னர் நடத்தப்படும் தேர்வில் மனுதாரரையும் பங்கேற்க அனுமதித்து முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story