நாளை இறுதிச் சடங்கு: மாணவியின் சொந்த ஊரில் போலீசார் திடீர் எச்சரிக்கை


நாளை இறுதிச் சடங்கு: மாணவியின் சொந்த ஊரில் போலீசார் திடீர் எச்சரிக்கை
x

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலுக்கு அவரது சொந்த ஊரில் நாளை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

கள்ளகுறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அதன் காரணமாக கடந்த 17 ஆம் தேதி கலவரம் வெடித்தது.

இதனிடையே இந்த மரணத்தில் இரு வேறு கருத்துகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாணவியின் உடலை தங்கள் தரப்பு சிறப்பு மருத்துவர் அடங்கிய குழுவை அமைத்து மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என மாணவியின் தந்தை வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று காலை நடந்த விசாரணையின்போது, நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை வாங்க மறுப்பது ஏன், பெற்றோர் மீது இந்த நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது. ஆனால் மாணவியின் உடல் மீது பெற்றோர் பந்தயம் கட்ட வேண்டாம் என நீதிபதி காட்டமாக பேசினார். இதையடுத்து பெற்றோர் தரப்பு, தங்களுக்கு மறுஉடற்கூராய்வில் திருப்தி இல்லை. இரு உடற்கூராய்வு வீடியோக்களையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதி கூறுகையில் இரு உடற்கூராய்வு அறிக்கைகளை புதுவை ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடுகிறேன். கண்ணியமான முறையில் இறுதி சடங்குகளை நடத்துங்கள். உங்கள் மகளின் ஆன்மா இளைப்பாறட்டும். மாணவி மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகிறார்கள். அது உங்களுக்கே தெரியாமல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் சமூகவலைதளங்கள் பொய் செய்தியை பரப்பி உள்ளன. நாளைக்குள் மாணவியின் உடலை பெற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். இல்லாவிட்டால் காவல் துறை சட்டபடி நடவடிக்கை எடுக்கும். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசிக்க வேண்டும். உடலை பெற்றுக் கொள்வது குறித்து பகல் 12 மணிக்கு பெற்றோரிடம் கேட்டு ஒரு முடிவை சொல்லுங்கள் என நீதிபதி, பெற்றோர் தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மகளின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றுக் கொள்வதாக பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அப்போது நீதிபதி சதீஷ்குமார் நாளை காலை 6 முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்று கொள்ள வேண்டும். நாளை மாலை 6 மணிக்குள் இறுதிச் சடங்குகள் நடத்த வேண்டும் என கூறிய அவர் இரு உடற்கூராய்வு அறிக்கைகளையும் ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி இந்த வழக்கை ஒத்தி வைத்தார்.

இதன்படி கள்ளக்குறிச்சி மாணவியின் உடலுக்கு நீதிமன்ற அறிவுறுத்தல் அடிப்படையில் நாளை பெரிய நெசலூர் கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது கிராமத்தில் போலீசார் ஒலிபெருக்கி மூலமாக மாணவியின் இறுதி ஊர்வலத்தில் உறவினர்களும் உள்ளூர் மக்களும் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும், வெளி ஆட்களோ பிற அமைப்புகளோ இதில் பங்கேற்கக் கூடாது என்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் ஒலிபெருக்கி மூலமாக அறிவுறுத்தி வருகின்றனர்.


Next Story