ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் இன்று வருகை மாமல்லபுரம் புராதன சின்ன பகுதியில் 800 போலீசார் பாதுகாப்பு


ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் இன்று வருகை மாமல்லபுரம் புராதன சின்ன பகுதியில் 800 போலீசார் பாதுகாப்பு
x

ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் வருகை காரணமாக, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களில் இன்று 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் தெரிவித்தார்.

செங்கல்பட்டு

சென்னையில் நடைபெறும் ஜி 20 மாநாடு கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு விருந்தினர்கள், பிரதிநிதிகள் இன்று (புதன்கிழமை) மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, கண்டுகளிக்க வருகை தருகின்றனர்.

நேற்று மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும், மோப்ப நாய்கள் மூலமும் கற்சிற்பங்கள் உள்ள பகுதிகளில் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தனர்.

அதேபோல் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வெளிநாட்டு விருந்தினர்களுக்காக நடத்தப்பட உள்ள கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் கடற்கரை கோவில் வளாகத்தில் உள்ள அரங்கம் முழுவதும் ஆய்வு செய்து சோதனை செய்தனர். அதேபோல் கடற்கரை கோவில் வளாகத்தில் உள்ள பூந்தொட்டிகள், புல்வெளிகள் உள்ளிட்டவைகளை வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவி மூலம் போலீசார் சோதனை செய்தனர். அப்போது வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சோதனைகளை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பார்வையிட்டார். கடற்கரை கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் அரங்கு, சிற்ப கண்காட்சி கூடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் நிருபர்களுக்கு போட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்கவும், கலை நிகழ்ச்சிகள், சிற்ப கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு ரசிக்க வருவதால் மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்கள் மற்றும் மாமல்லபுரம் நகரம் முழுவதும் 800 போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை உள்ளிட்ட 7 இடங்களில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீசார் மூலம் தீவிர பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே வாகனங்களும், பொதுமக்களும் மாமல்லபுரம் வர அனுமதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு விருந்தினர்கள் வருகையால் மாமல்லபுரத்தில் உள்ள கடைகள் திறக்க எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை அவர்கள் வழக்கம்போல் தங்கள் கடைகளை திறந்து வியாபாரம் செய்யலாம். மேலும் மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் வரலாம். ஆனால் அவா்கள் இங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்க மட்டும் அனுமதி இல்லை. மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பொழுது போக்கு மையங்களுக்கு செல்ல அவர்களுக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் இஸ்மாயில் மற்றும் அதிகாரிகள் பலர் வந்திருந்தனர்.


Next Story