ஜி20 மாநாட்டு குழுவினர் மாமல்லபுரம் வருகை - பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு


ஜி20 மாநாட்டு குழுவினர் மாமல்லபுரம் வருகை - பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு
x

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வருகின்றனர். இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஜி20 மாநாட்டுக்குழு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

செங்கல்பட்டு

ஜி20 மாநாடு வருகிற ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 2-ந்தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் 20 நாடுகளை சேர்ந்த 100 விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில், மாநாட்டில் கலந்து கொள்ள வரும் விருந்தினர்களை பிப்ரவரி 1-ந்தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்க்க மத்திய, மாநில சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து மாமல்லபுரத்திற்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களை எப்படி வரவேற்பது, அவர்களை பாதுகாப்பாக எங்கு தங்க வைப்பது, என்பது குறித்து சென்னை ஜி20 மாநாட்டு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் இயக்குனர் சைதன்ய பிரசாத், இணை ஒருங்கிணைப்பாளர் நித்தாபிரசாத், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் ஆகியோர் பல்வேறு துறை அதிகாரிகள், பாதுகப்பு படை போலீசாருடன் மாமல்லபுரம் வந்தனர்.

அவர்கள் கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி வந்து பாதுகாப்பு முன் ஏற்பாடுகள், வெளிநாட்டு விருந்தினர்களை வரவேற்று எப்படி ஒவ்வொரு புராதன சின்னங்களாக அழைத்து சென்று அவர்களை சுற்றி காட்டி மகிழ்விப்பது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

அவர்களுடன் சென்னை வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல், மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் எஸ்.இஸ்மாயில், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடன் வந்திருந்தனர்.


Next Story