கள்ளை காளியம்மன் கோவில் தேரோட்டம்
தோகைமலை அருகே கள்ளை காளியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பங்குனி திருவிழா
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கள்ளை கிராமத்தில் உள்ள காளியம்மன், பகவதி அம்மன், கருப்பசாமி ஆகிய கோவில்களில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி முதல்நாள் காளியம்மனுக்கு பூ போடும் நிகழ்ச்சி, கரகம் பாலித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து கருப்பசாமிக்கு குட்டி குடித்தல் நிகழ்ச்சி, பொங்கல் வைத்தல், மாவிளக்கு போடுதல், மொட்டை அடித்தல், கிடா வெட்டுதல் உள்ளிட்டவை நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காளியம்மன், பகவதி அம்மன், கருப்பசாமி ஆகிய சாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தேரோட்டம்
தொடர்ந்து தாரை-தப்பட்டை முழங்கவும், வாண வேடிக்கையுடனும் கருப்பசாமி குதிரை வாகனத்தில் முன்செல்ல, பகவதி அம்மன் முத்துப் பல்லக்கிலும், பெரிய தேரில் காளியம்மனும் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் அதன் நிலையை அடைந்தது. காளியம்மன் தேர், முத்து பள்ளக்கு, குதிரை வாகனம் ஆகியவைகள் கோவில் வளாகம் வந்தவுடன் அங்கு தயார் நிலையில் நேர்த்தி கடனுக்காக வைக்கப்பட்டு இருந்த எருமை கிடாக்களை வெட்டி கள்ளை காளியம்மனுக்கு காவல் கொடுத்தனர்.
பின்னர் மஞ்சள் நீராடுதல், கரகம் எடுத்து விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கள்ளை, சுக்ககாம்பட்டி, மங்காம்பட்டி, சின்னகள்ளை, குழந்தைபட்டி, மணியகவுண்டன்பட்டி, பூவாயிபட்டி, முடக்குபட்டி ஆகிய 8 பட்டி ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர். இந்த திருவிழாவில் திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாமக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.