முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்; 13-ந்தேதி தொடங்குகிறது
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விளையாட்டு போட்டிகள்
2022-23-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் 5 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த போட்டிகளில் பங்குபெற இணையதளத்தில் பதிவு செய்த நபர்களுக்கு மட்டும் விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
மேலும் கிரிக்கெட் விளையாட்டு போட்டி ஆண்கள் பிரிவினருக்கு திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும், பெண்கள் பிரிவினருக்கு ஜீவா வேலு பன்னாட்டு மேல்நிலைப்பள்ளியிலும் மற்றும் கால்பந்து விளையாட்டு போட்டி ஆண்கள் பிரிவினருக்கு டேனிஷ் மிஷின் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும் நடைபெறுகிறது.
விளையாட்டி போட்டியில் கலந்துகொள்ள வரும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளில் அரசு ஊழியர்கள் ஆதார் அட்டை மற்றும் பணியாளர் அடையாள அட்டை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆதார் அட்டை மற்றும் போனபைடு சான்றிதழ் (Bonafide Certificate), பொது பிரிவினர் ஆதார் அட்டை, மாற்றுத் திறனாளி பிரிவினர் ஆதார் அட்டை மற்றும் சிறப்பு அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.
13-ந்தேதி தொடங்குகிறது
வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்குகிறது. 13-ந்தேதி அரசு ஊழியர்களுக்கு மட்டும் கபடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து, செஸ் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
மேலும் அன்று பொது பிரிவினருக்கு தடகள போட்டிகள் நடைபெற உள்ளது. 14-ந்தேதி மாற்றுதிறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி பிரிவினர்களுக்கு ஆண்களுக்கான தடகள போட்டிகள் வருகிற 22-ந்தேதியும், பெண்களுக்கான தடகள போட்டிகள் 23-ந்தேதியும் நடக்கிறது.
24-ந்தேதி பள்ளி, கல்லூரி, பொது பிரிவினர்களுக்கு சிலம்பம் மற்றும் இறகுப்பந்து போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் அன்று பள்ளி, கல்லூரி பிரிவினர்களுக்கு மட்டும் ஆக்கி போட்டியும், 25-ந்தேதி நீச்சல் (ஆண்களுக்கு), கால்பந்து, கூடைப்பந்து போட்டிகளும், 26-ந்தேதி வாலிபால், மேசைப்பந்து, கபடி, நீச்சல் (பெண்களுக்கு) நடைபெற உள்ளது.
மேலும் 26-ந்தேதி பொது பிரிவினர்களுக்கு கபடி, வாலிபால் ஆகிய போட்டிகளும் நடக்கிறது. 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதி பள்ளி, கல்லூரி மற்றும் பொது பிரிவினர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு 04175-2533169 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.