முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்


பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கின. முதல் நாளில் நடந்த போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பெரம்பலூர்

விளையாட்டு போட்டிகள்

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான பெரம்பலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது.

முதல் நாளில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம், தடகளம், மாணவர்களுக்கான வாலிபால் ஆகிய போட்டிகள் நடந்தது. போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, பிரபாகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிலம்பம், தடகளம்-வாலிபால்

இதில் மாணவ-மாணவிகளுக்கு கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, மான் கொம்பு வீச்சு, ஒற்றை சுருள் வாள் வீச்சு, அலங்கார வீச்சு ஆகிய சிலம்ப போட்டிகளும், 100, 200, 400, 800, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களும், தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய தடகள விளையாட்டு போட்டிகளும் தனித்தனியாக நடந்தன. மாணவர்களுக்கான வாலிபால் போட்டியும் நடந்தது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். சிலம்ப போட்டிகளில் 160 மாணவ-மாணவிகளும், தடகள போட்டிகளில் 470 பேரும், வாலிபால் போட்டியில் 12 அணிகளும் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் லெனின் மற்றும் நகர்ப்புறம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பரிசு தொகை

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த வீரர்-வீராங்கனைகளும், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் வருகிற மே மாதத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி மாணவ-மாணவிகள்

பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் இன்று (வியாழக்கிழமை) கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தடகளம், கபடி, சிலம்பம், இறகுபந்து ஆகிய போட்டிகள் தனித்தனியாக நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடக்கிறது. மேலும் அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவினருக்கும் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.

1 More update

Next Story