கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழுவின் 23-வது சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமை தாங்கினார். மேலாளர் முத்துராமன் வரவேற்றார். இளநிலை உதவியாளர் தீபா வரவு, செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். தொடர்ந்து கூட்டத்தில் 8-வது வார்டு உறுப்பினர் பாண்டியன்:- ஊராட்சிகளில் பயன்பாடு இல்லாமல் இருக்கின்ற உயர் கோபுர மின்விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 10-வது வார்டு உறுப்பினர் ராஜேந்திரன்:- கந்தர்வகோட்டை நகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தரமான தார் சாலைகள், சிமெண்டு சாலைகள், பேவர் பிளாக் சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். 14-வது வார்டு உறுப்பினர் திருப்பதி:- மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் அனைத்து ஊராட்சிகளிலும் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுப்பதற்கு மருந்து தெளிக்க வேண்டும். 7-வது வார்டு உறுப்பினர் கலியபெருமாள்:- தஞ்சாவூர் சாலையில் சாலை ஓரத்தில் கொட்டப்படுகின்ற குப்பை கழிவுகளால் அந்தப் பகுதியில் செல்ல முடியாமல் துர்நாற்றம் வீசுகிறது. ஆகவே முறையான குப்பை கிடங்கை அமைத்து அதில் குப்பைகளை கொட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது வார்டில் உள்ள குறைகள் குறித்து எடுத்துக் கூறினார்கள். இந்த கோரிக்கைகள் அனைத்தையும், நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும் என்று ஒன்றிய குழு தலைவர் உறுதி அளித்தார். கூட்டத்தில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் குமார் நன்றி கூறினார்.