விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்


விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்
x

திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை


திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலையிலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு நேற்று பழம், பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்தனர். இன்றும் ஏராளமான மக்கள் கடைவீதிகளுக்கு பொருட்கள் வாங்க வந்தனர்.

பல்வேறு இடங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு விநாயகர் சிலைகளை வாங்கி சென்றனர்.

குறிப்பாக களிமண்ணால் செய்யப்பட்டு பல்வேறு வண்ணங்களில் தீட்டப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடந்தது. விநாயகர் சிலைகளை பெற்றோர்கள் வாங்கியதும் குழந்தைகள் மகழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.

வண்ண அலங்கார குடைகள்

அதுமட்டுமின்றி விநாயகர் சிலையை அலங்கரிக்க சாலையோரம் வண்ண அலங்கார குடைகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த குடைகளையும் மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். எருக்கம் பூ மாலை, அருகம்புல், பழங்கள், சோளம், கம்பு போன்றவையும் விற்பனையானது.

திருவண்ணாமலை நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இந்து அமைப்புகள், பல்வேறு சங்கங்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் விதவிதமாக பிரம்மாண்டமாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. விநாயகர் சிலைகளை வழிபாடு செய்து இளைஞர்கள் கொண்டாடினர்.

முன்னதாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ள பந்தலுக்கு சிலைகளை தாரை, தப்பட்டை அடித்து ஆடியபடி கொண்டு வந்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவில்

மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் இன்று மாலை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

இக்கோவில் அருகில் உள்ள இரட்டை பிள்ளையார் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் சிறிய வகையிலான சிலைகளுக்கு வீடுகளில் சுண்டல், கொழுக்கட்டை, பழங்கள் ஆகியவற்றை படையலிட்டு வழிபட்டனர்.

மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் ரோந்து பணியிலும், ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

ஆரணி

ஆரணி பெரிய கடை வீதியில் நகைக்கடை, அடகு நகை கடை வியாபாரிகள் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சுமார் 10 அடி உயரமுள்ள மகா கணபதியை அலங்கரித்து மகாகணபதி யாக பூஜை நடந்தது.

பெரிய கடை வீதியில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது, மாலையில் உற்சவர் சாமியை மூஷிக வாகனத்தில் அலங்கரித்து வாணவேடிக்கை மங்கள வாத்தியத்துடன் திருவீதி உலா நடைபெற்றது.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நீதி விநாயகர் கோவிலில் சிறப்பு யாக பூஜைகளுடன் சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

காந்தி ரோட்டில் சந்திரகுளம் பகுதியில் சந்திரகுள சக்தி விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா அலங்காரம் நடைபெற்றது. ஆரணிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கில்லா சுந்தர விநாயகர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

இரவில் விநாயகரை புஷ்பல்லக்கில் அலங்கரித்து திருவீதி உலா நடைபெற்றது.

மேலும் நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்து முன்னணி அமைப்பின் சார்பில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்மாண்டமான முறையில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு, பெரணமல்லூர், தேசூர் ஆகிய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மொத்தம் 185 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

வந்தவாசி

வந்தவாசி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. மேலும் இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வந்தவாசி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விநாயகர் சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வந்தவாசி தெற்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


Next Story