விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு


விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு
x

கும்பகோணத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

சிலைகள் ஊர்வலம்

கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரின் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இரவு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு கும்பகோணம் நகரம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஆற்றில் கரைப்பு

கும்பகோணம் பகுதியில் 87 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பின்னர் விநாயகர் சதூர்த்தி நாளிலேயே 40 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.நேற்று மாலை கும்பகோணம் மகாமகக்குளம் பகுதியில் இருந்து பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 47 விநாயகர் சிலைகள் நேற்று மாலை 5 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு நாகேஸ்வரன்கோவில் கீழவீதி, வடக்கு வீதி, சாரங்கபாணி கீழவீதி, தெற்கு வீதி, பெரியக்கடைவீதி, டி.எஸ்.ஆர். பெரிய தெரு, காந்தி பூங்கா, மடத்து தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக காவிரி ஆற்றின் பகவத் படித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

வாக்குவாதம்

இதில் பா. ஜனதா கட்சியின் அறிவு சார்பு பிரிவின் மாநில தலைவர் கார்த்திகேயன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சி சுப்பிரமணியன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சதீஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மகாமக குளம் வழியாக தாமதமாக கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலைகளை டைமண்ட் தியேட்டர் சந்திப்பில் போலீசார் தடுத்து நிறுத்தினார். இதனால் அங்கிருந்த போலீசாருக்கும் இந்து அமைப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்துடன்பேச்சுவார்த்தை நடத்தி மாற்று வழியில் செல்லும்படி கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து விநாயகர் சிலைகள் காந்தி பூங்கா வழியாக கொண்டு செல்லப்பட்டன.

பாதுகாப்பு பணி

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் நேரடி மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கீர்த்திவாசன் (கும்பகோணம்), ஜாபர்சித்திக்(திருவிடைமருதூர்), பூரணி (பாபநாசம்), உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story