பலத்த போலீஸ் பாதுகாப்புடன்விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
கடலூர், சிதம்பரம் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி கோவில்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டனர். இந்த சிலைகளை 3-வது அல்லது 5-வது நாளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கடலூர் மாவட்டம் முழுவதிலும் 1,298 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதற்கிடையே விநாயகர் சிலைகளை கடலூர் சில்வர் பீச் கடற்கரை, கொள்ளிடம், வெள்ளாறு மற்றும் உப்பனாற்றில் மட்டுமே கரைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பக்தர்கள் வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கடற்கரையில் வழிபாடு
இதையடுத்து நேற்று காலையில் இருந்தே லாரி, மினி லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் விநாயகர் சிலைகளை தூக்கி வைத்து கரைப்பதற்காக பக்தர்கள் புறப்பட்டனர். அப்போது தாரை தப்பட்டை, பேண்டு வாத்தியம் போன்ற இசைக்கருவிகளை இசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி சில்வர் பீச்சுக்கு பக்தர்கள் வந்தனர். அங்குள்ள உயர்கோபுர மின் விளக்கு அருகில் வந்ததும், வாகனங்களில் இருந்த விநாயகர் சிலைகளை பக்தர்கள் கீழே இறக்கி, பின்னர் தோளில் வைத்து சுமந்தபடி கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு விநாயகர் சிலைக்கு தேங்காய், பழம் படைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். தொடர்ந்து அந்த விநாயகர் சிலைகளை ஏற்கனவே, சிலைகளை கரைப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த மீட்பு குழுவினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் விநாயகர் சிலைகளை கடலுக்குள் கொண்டு சென்று கரைத்தனர். சிலையை கரைத்த பின்னர் பக்தர்கள் அங்கிருந்து தாங்கள் வந்த வாகனங்களில் ஊருக்கு திரும்பி சென்றனர்.
கடலில் கரைப்பு
கடலூர் மட்டுமின்றி நெல்லிக்குப்பம், பண்ருட்டி, கண்டரக்கோட்டை, முத்தாண்டிக்குப்பம் ஆகிய பகுதிகளில் இருந்தும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தும் பக்தர்கள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கடலில் கரைத்தனர். அப்போது சிங்கம், மயில், மான், காளை, மூஷிகம் போன்ற பல்வேறு வாகனங்களின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலைகளையும் பக்தர்கள் கரைப்பதற்காக எடுத்து வந்தனர். மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட 1 அடி முதல் 2 அடி வரை உயரமுள்ள சிறிய விநாயகர் சிலைகளையும், சில்வர் பீச்சுக்கு கொண்டு வந்து கடலில் கரைத்தனர்.
விநாயகர் சிலைகளை கரைக்கும் போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சிலைகளை கரைக்க வரும்போது பீச்ரோடு வழியாக வரவும், கரைத்து முடித்த பிறகு புதுப்பாளையம் மெயின்ரோடு வழியாக பாரதி ரோட்டுக்கு செல்லவும் போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். சிலைகளை கரைக்க வருபவர்கள் இடையூறின்றி வந்து செல்லும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையில் சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது.
இதில் கடலூர் சில்வர் பீச்சில் மட்டும் நேற்று 546 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
இதேபோன்று, ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 44 விநாயகர் சிலைகளில் சாமியார்பேட்டை கடற்கரையில் 11 விநாயகர் சிலைகளும், கொள்ளிடம் அணைக்கரையில் 5, வெள்ளாற்றில் 28 சிலைகளும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. ஊர்வலத்தின் போது, இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடியபடி சென்றனர்.
காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், வீராணம் ஏரி, வெள்ளியங்கால் ஓடை, வடக்கு ராஜன் வாய்க்கால், வடவாறு, கான்சாகிப்வாய்க்கால் போன்ற இடங்களுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.
ஊர்வலத்தின் போது, சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார் தலைமையில்போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, அமுதா, மற்றும் 50க்கும் மேற்பட்டபோலீசார்பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மட்டும் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
மங்கலம்பேட்டையில் நாளை ஊர்வலம்
விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொது இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் நாளை (வெள்ளிக்கிழமை) கடலூர் சில்வர் பீச்சில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. ஊர்வலத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.