செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு


செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு
x

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்த விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல் கட்டமாக மாமல்லபுரம் கடலில் 70 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

செங்கல்பட்டு

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தெருக்கள், வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நேற்றும் வருகிற 24 ந்தேதி (ஞாயிற்றுகிழமை) மாமல்லபுரம் கடலில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கினர்.

இந்த நிலையில் காஞ்சீபுரம் நகரம், பாலுசெட்டிசத்திரம், வாலாஜாபாத், செவிலிமேடு, கருக்குபேட்டை, முத்தியால்பேட்டை, சிங்கபெருமாள்கோவில், திம்மாவரம், பாலூர், படாளம், கூடுவாஞ்சேரி, மாமல்லபுரம் நகரம் உள்பட பல்வேறு இடங்களில் 6 அடி, 10 அடி, உயரமுள்ள விநாயகர் சிலைகள் இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

கடலில் கரைப்பு

முதல் கட்டமாக நேற்று காஞ்சீபுரம் மாவட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை மாமல்லபுரம் கடலில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கினார்கள். இதையடுத்து ஒவ்வொரு சிலையாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக பல்வேறு இடங்களில் இருந்து மாட்டு வண்டிகள், டிராக்டர், வேன்களில் ஏற்றி மாமல்லபுரம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அங்கு தேங்காய் உடைத்து தீபாராதனை செய்து வழிபட்டார்கள். பின்னர் நீச்சல் தெரிந்த மாமல்லபுரம் மீனவ இளைஞர்கள் மூலம் ஒவ்வொரு சிலையாக தூக்கி செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.

கடல் சீற்றம் காரணமாக சிலைகள் எடுத்து வந்த சிலை அமைப்பாளர்கள் யாரையும் கடலில் இறங்கி கரைக்க போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட நூற்றுக்கணக்கான களிமண் விநாயகர் சிலைகளும் நேற்று மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன. கடற்கரையில் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத் தலைமையில், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story