ராமேசுவரம் கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியன்று நகரின் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்காக விநாயகர் சிலைகள் ராமேசுவரத்துக்கு வந்து சேர்ந்தன.
ராமேசுவரம்,
விநாயகர் சதுர்த்தியன்று நகரின் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்காக விநாயகர் சிலைகள் ராமேசுவரத்துக்கு வந்து சேர்ந்தன.
விநாயகர் சதுர்த்தி விழா
நாடு முழுவதும் வருகின்ற 31-ந்தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இதற்காக ராமநாதபுரத்தில் இருந்து லாரி மூலம் நேற்று 20 விநாயகர் சிலைகள் அபயஆஞ்சநேயர் கோவில் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அங்கு இறக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆஞ்சநேயர் கோவிலில் இறக்கி வைக்கப்பட்டுள்ள சிலைகளை போலீசாரும் பார்வையிட்டு சிலைகளின் மொத்த எண்ணிக்கை, உயரம் குறித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தியிடம் கேட்டு பதிவு செய்தனர்.
ஊர்வலம்
இது குறித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ராமமூர்த்தி கூறும் போது:-
வருகின்ற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று இந்து முன்னணி சார்பில் ராமேசுவரத்தில் 20 இடங்களிலும், மண்டபம், பாம்பன், தங்கச்சி மடம், உச்சிப்புளி, ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் வருகின்ற 1 மற்றும் 2 ஆகிய 2 நாட்களில் போலீசாரின் அனுமதியுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அந்தந்த கடல் மற்றும் நீர்நிலை, ஊருணி பகுதிகளில் கரைக்கப்பட உள்ளது.
விநாயகர் சிலைகள் தயார்
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் காகித கூழால் விநாயகர் சிலை அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளன.சுமார் 3 அடி முதல் 6 அடி உயரம் வரையிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. சிம்மம், மயில், மூஷிகம், யாழி உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மீது விநாயகர் அமர்ந்திருப்பது போன்று சிலை செய்யப்பட்டுள்ளன. அதுபோல் ராமநாதபுரத்தில் தயார் செய்து வைக்கப்பட்டிருந்த அனைத்து விநாயகர் சிலைகளும் அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.