தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் 5-வது நாளாக விநாயகர் சிலைகள் கரைப்பு
தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் 5-வது நாளாக விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
தேவூா்:
விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தி விழாவில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை தேவூர், எடப்பாடி, வெள்ளாண்டிவலசு பகுதியில் இருந்து லாரி உள்ளிட்ட வாகனங்களில் மேளதாளத்துடன் காலை முதலே காவிரி ஆற்றங்கரைக்கு கொண்டு வந்தனர்.
5-வது நாளாக இருப்பதால் கிராம மக்கள் காவிரி ஆற்றில் இறங்கி நின்று 5 தோப்புக்கரணம் போட்டு 'கணேசா கணேசா' கோஷமிட்டு வழிபாடு செய்தனர். பின்னர் காவிரி ஆற்றில் விநாயகரை கரைத்து விட்டு புனித நீராடி அங்குள்ள அங்காளம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர்.
கண்காணிப்பு பணி
கல்வடங்கம் ஆற்றில் வழக்கமாக 7 நாட்கள் விநாயகர் சிலைகளை கரைப்பது வழக்கம். நேற்று 5-வது நாளாக சிலைகள் கரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிலை கரைக்கும் இடத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் போலீசார், வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி நிர்வாகத்தினர் ஒலிபெருக்கி மூலம் விநாயகர் சிலைகளை கரைப்பவர்களுக்கு தண்ணீருக்குள் கவனமாக இறங்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து அறிவுரை வழங்கினர்.