பொது பாடத்திட்ட விவகாரம்: தன்னாட்சி கல்லூரி பிரதிநிதிகளுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை


பொது பாடத்திட்ட விவகாரம்: தன்னாட்சி கல்லூரி பிரதிநிதிகளுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை
x

பொதுப் பாடத்திட்டம் விவகாரம் தொடர்பாக அமைச்சர் பொன்முடி தலைமையில் தன்னாட்சி கல்லூரி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பிரதிநிதிகள் அடுக்கடுக்கான எதிர் கருத்துகள், மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களை முன்வைத்தனர்.

உயர்கல்வியில் பொதுப் பாடத்திட்டத்தை கொண்டு வருவதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான மாதிரி பாடத்திட்டம் (மாடல் சிலபஸ்) அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது. அதில் 90 சதவீதம் கல்வி நிறுவனங்கள் அதனை பின்பற்ற தொடங்கிவிட்டதாக உயர்கல்வித்துறை தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் பொதுப் பாடத்திட்டத்துக்கு தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து அவர்களுடன் ஆலோசனை நடத்த உயர்கல்வித் துறை ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது. அதன்படி, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தன்னாட்சி கல்லூரி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது.

இதில் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் கார்த்திக், கல்லூரிக் கல்வி இயக்குனர் கீதா, உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சென்னையில் இருந்து 22 கல்லூரிகள் உள்பட மதுரை, கோவை, திருச்சி சில மாவட்டங்களில் இருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட தன்னாட்சி கல்லூரிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் கருத்துகளை தனித்தனியாக பதிவு செய்தனர். இவர்களில் மாநில கல்லூரி, நந்தனம் கல்லூரி முதல்வர்கள் உள்பட சில கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் பொதுப் பாடத்திட்டத்தை ஆதரித்து பேசினார்கள்.

ஆனால் கோவை, திருச்செங்கோடு, சென்னை, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தன்னாட்சி கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆதரிக்காமல், அடுக்கடுக்கான எதிர்ப்பு கருத்துகளையும், பொதுப் பாடத்திட்டத்தில் உள்ள பிரச்சினைகளையும் எடுத்துரைத்தனர்.

அதன்படி, மிக முக்கியமாக பொதுப் பாடத்திட்டத்தால் என்.ஐ.ஆர்.எப். தரவரிசையில் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தை பெரும்பாலான கல்லூரிகளின் முதல்வர்கள் முன்வைத்தனர்.

மேலும், பொதுப் பாடத்திட்டத்துக்கு போதிய பாடவேளை நேரம் இல்லாதது, ஆசிரியர்கள் பற்றாக்குறை, கிரெடிட் சிஸ்டத்தில் ஏற்படும் பிரச்சினை, விருப்ப பாடங்களை எப்போது வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என்பதற்கு எதிர்ப்பு, இளநிலை பாடத்திட்டத்தை விட முதுநிலை பாடத்திட்டத்தில் பல குளறுபடிகள், துணைப் பாடங்கள் பொருந்தவில்லை, பல்கலைக்கழக மானியக்குழு அளித்துள்ள பாடத்திட்டங்களை வகுக்கும் உரிமைகள் பறிக்கப்படுகிறது என பல்வேறு எதிர்ப்பு கருத்துகளை கூறினார்கள்.

அதிலும் குறிப்பாக ஓரிரு கல்லூரிகளின் பிரதிநிதிகள் புதிய தேசியக் கல்விக் கொள்கை தொடர்பான கருத்துகளை எடுத்து கூறினார்கள். அதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, 'தேசிய கல்விக் கொள்கை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அதில் உள்ள நல்ல கருத்துகளை நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நம்முடைய கல்வி முறையான 10+2+3 என்பதில் உறுதியாக இருக்கிறோம்' என்று உறுதிப்பட தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டத்தின் நிறைவில், தன்னாட்சி கல்லூரிகளின் முதல்வர்கள், பிரதிநிதிகளை பார்த்து பொதுப் பாடத்திட்டம் வேண்டாம் என்று சொல்பவர்கள் கையை தூக்குங்கள் என்று கூறினார். அதில் சிலர் கைகளை உயர்த்தினார்கள். அந்தவகையில் பார்க்கும்போது பொதுப் பாடத்திட்டத்தை சில தன்னாட்சி கல்லூரிகள் ஆதரிக்காததையே காட்டுகிறது.

அதிலும் சிலர் இதை ஒரு நாளில் பேசி சரிசெய்துவிட முடியாது. அடுத்தடுத்த ஆலோசனை நடத்திதான் சரிசெய்ய முடியும் என்றும், எனவே இந்த ஆண்டு இதை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் கூறினார்கள். இதுகுறித்து கோவையை சேர்ந்த தன்னாட்சி கல்லூரி பிரதிநிதி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'பொதுப் பாடத்திட்டம் சரி தான். ஆனால் அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டியிருக்கிறது. அது பற்றி எடுத்துரைத்தோம். அந்த மாற்றங்களை எழுத்துப்பூர்வமாக கல்லூரிகளை தெரிவிக்க அமைச்சர் கூறியிருக்கிறார். நாங்கள் தெரிவிக்கும் மாற்றங்களை மட்டும் செய்தால், பொது பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை' என்று தெரிவித்தார்.


Next Story