பயணிகளின் வசதிக்காக சென்டிரல் ரெயில் நிலையத்தில் ராட்சத மின் விசிறிகள்


பயணிகளின் வசதிக்காக சென்டிரல் ரெயில் நிலையத்தில் ராட்சத மின் விசிறிகள்
x

பயணிகளின் வசதிக்காக சென்டிரல் ரெயில் நிலையத்தில் ராட்சத மின்விசிறிகளை தெற்கு ரெயில்வே அமைத்துள்ளது.

சென்னை

கோடை விடுமுறை

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும். இங்கிருந்து வடமாநிலங்கள் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு 158 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நாள் தோறும் 1 லட்சத்து 78 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். இரவு, பகல் என எப்போதும் சென்டிரல் ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்படும்.

கோடை விடுமுறையையொட்டி சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. தற்போது கோடைவெயில் சுட்டெரித்து வருவதால் போதிய காற்றோட்ட வசதி இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். பயணிகள் காத்திருப்பு பகுதிகளில் உள்ள மின்விறியில் இருந்து போதிய காற்றும் வரவில்லை. சில மின்விசிறிகள் பழுதாகி இருந்தது. எனவே, கூடுதல் மின் விசிறிகளை நிறுவ வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

ராட்சத மின்விசிறி

இந்த நிலையில் நவீன தொழில்நுட்பம் கொண்ட ராட்சத மின்விசிறிகளை தெற்கு ரெயில்வே நிர்வாகம் பயணிகள் காத்திருப்பு பகுதியில் நிறுவியுள்ளது. மொத்தம் 4 மின்விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மின்விசிறியும் சுமார் 20 மீட்டர் உயரம் கொண்டது. 5 இறக்கைகள் உள்ளது. ராட்சத மின்விசிறிகளால் பயணிகள் காத்திருப்பு பகுதி முழுவதும் தென்றல் காற்று வீசுகிறது.இதனால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என பலரும் சிரமம் இன்றி காத்திருந்து ரெயிலில் ஏறி செல்கின்றனர். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பயணிகள் வியர்வை மழையில் நனைவதில் இருந்து இந்த மின்விசிறிகள் காப்பாற்றி உள்ளது.

தெற்கு ரெயில்வேயின் இந்த முயற்சிக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ளது போன்று எழும்பூர், தாம்பரம் போன்ற முக்கிய ரெயில் நிலையங்களில் இந்த ராட்சத மின் விசிறியை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story