சிறுமியின் கருமுட்டை விற்பனை: புரோக்கராக செயல்பட்ட பெண்ணை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி


சிறுமியின் கருமுட்டை விற்பனை: புரோக்கராக செயல்பட்ட பெண்ணை  காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி
x

கருமுட்டை விற்பனையில் புரோக்கராக செயல்பட்ட பெண்ணை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஈரோடு மகளிர் கோர்ட்டு அனுமதி அளித்தது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறையில் உள்ள தனியார் கருத்தரிப்பு மருத்துவமனைகளில் கருமுட்டை தானம் என்ற பெயரில் முறைகேடாக 16 வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை விற்பனை நடந்ததாக புகார் வந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறுமியின் தாயார், தாயாரின் 2-வது கணவர், புரோக்கராக செயல்பட்ட மாலதி என்ற பெண் மற்றும் சிறுமியின் வயதை அதிகரித்து போலி ஆதார் அட்டை தயாரித்து வழங்கிய ஜான் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிறுமியின் கருமுட்டையை தானம் என்ற பெயரில் முறைகேடாக விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கருமுட்டை விற்பனை தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்தும் வகையில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர்.

இதுதொடர்பான மனு ஈரோடு மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த மனு ஈரோடு மகளிர் கோர்ட்டு நீதிபதி ஆர்.மாலதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி போலீசாரின் வேண்டுகோளை ஏற்று புரோக்கர் மாலதியை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

அதைத்தொடர்ந்து மாலதியை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். மற்ற 3 பேருக்கும் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.


Next Story