சென்னையில் இன்று தொடங்குகிறது உலக முதலீட்டாளர் மாநாடு: முதல்-அமைச்சர் தொடங்கிவைக்கிறார்


சென்னையில் இன்று தொடங்குகிறது உலக முதலீட்டாளர் மாநாடு: முதல்-அமைச்சர் தொடங்கிவைக்கிறார்
x
தினத்தந்தி 7 Jan 2024 12:03 AM GMT (Updated: 7 Jan 2024 12:26 AM GMT)

மாநாட்டு தொடக்க விழா மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் முன்னிலையில் நடைபெறுகிறது.

சென்னை,

2 நாள் மாநாடு

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார முன்னேற்றத்தை பெற்றிருக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

அதற்கேற்ற வகையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் உள்ளிட்ட சில நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து பேசினார்.

மேலும், தமிழகத்திற்கு உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த மாநாடு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நடத்தப்படுகின்றன.

இன்று காலை 10 மணிக்கு மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். மாநாட்டு தொடக்க விழா மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் முன்னிலையில் நடைபெறுகிறது. அவர் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை ஆற்றுகிறார். தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நன்றி கூறுகிறார். காலை 11.45 மணிக்கு தொடக்க விழா நிறைவு பெறுகிறது. தொடக்க விழா நிகழ்ச்சியை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒளிபரப்ப மாவட்ட கலெக்டர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து மாநாட்டு விருந்தினருக்கும் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சிறப்பு விருந்து அளிக்கிறார்.

பொருளாதார நிபுணர்கள் சிறப்புரை

இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் உள்ளன. 2 நாட்கள் மாநாட்டில் 26 அமர்வுகளில் 170-க்கும் மேற்பட்ட உலக புகழ் வாய்ந்த பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த 2 நாட்களிலும் தொழில் கண்காட்சிகள் இடம் பெறுகின்றன. தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள தொழில் சூழல்கள் பற்றி தனி அரங்குகளை அமைத்துள்ளது. விற்பனையாளர், வாங்குவோர் ஆகியோருக்கு இடையே கூட்டங்களை நடத்தவும் இந்த மாநாட்டில் வாய்ப்பு உள்ளது.

பெருந்தொழில்களுக்கு மட்டுமல்லாமல், சிறு தொழில் நிறுவனங்கள், புத்தொழில்கள் ஆகியவற்றிற்கும் தனித்தனி அமர்வுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதலீடு தொடர்பாக தொழில் உடன்பாடு ஏற்பட்டதும், அதை புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் போன்ற பொருளாதார நிபுணர்கள், இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சோம்நாத் உள்பட தேசிய மற்றும் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை நிர்வாகிகள் மற்றும் பலர் சிறப்புரையாற்றுவார்கள்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இந்த மாநாட்டில் தொழில்துறை சார்ந்த முதலீடுகளுக்கான பல்வேறு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில் வழிகாட்டி மையம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. தொழில் முதலீடுகளை ஏன் தமிழகத்தில் குவிக்க வேண்டும்? என்பதற்கான காரணங்களை அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் இந்த மாநாட்டின்போது தமிழக அரசு எடுத்துரைக்கும்.

மாநிலத்தின் அமைதியான சூழ்நிலை, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, மனிதவளம், தொழில்நுட்ப ஆற்றல், ஏற்றுமதி-இறக்குமதிக்கான வசதிகள், வான்வழி, சாலை வழி மற்றும் கடல் வழி சரக்கு போக்குவரத்திற்கான கட்டமைப்பு, தொழில் அனுமதி பெறுவதற்கு தமிழக அரசு உருவாக்கியுள்ள எளிதான வழிகள் போன்றவை இந்த மாநாட்டின் மூலம் ஒவ்வொரு தொழில் நிறுவனங்களுக்கும் எடுத்துரைக்கப்படும். இதுவே தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் முக்கிய ஆயுதமாக இருக்கும்.

இந்த மாநாட்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கான தமிழ்நாட்டின் பார்வை என்ற ஆய்வறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். அதோடு, 'டான்பண்ட்' என்ற புதிய திட்டத்தை அவர் தொடக்கி வைப்பார். இந்த மாநாட்டில் செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கை-2024 வெளியிடப்படும்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பதிவு செய்திருக்கிறார்கள். 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் மாநாட்டில் நேரடியாக பங்கு கொள்வார்கள். 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்.

முக்கிய தொழில்கள்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பெருந்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் அரங்கங்கள், புத்தொழில் நிறுவனங்களின் அரங்கம், தமிழ்நாடு தொழில் சூழல் அரங்கம் மற்றும் சர்வதேச அரங்கம் ஆகியவை இந்த மாநாட்டின் சிறப்பம்சமாக இடம் பெற்றிருக்கும். மாநாட்டில், மோட்டார் வாகனங்கள், ஜவுளி, காலணி தொழில்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், வேளாண்மை தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் முக்கிய இடம் பிடிக்கும்.

தமிழகத்தில் இதுவரை நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு

தமிழகத்தில் இதுவரை 2 முறை முதலீட்டாளர்கள் மாநாடு நடந்துள்ளது. தற்போது நடைபெறுவது 3-வது மாநாடு ஆகும்.

* 2015-ம் ஆண்டு செப்டம்பரில் முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 4 லட்சத்து 70 ஆயிரத்து 65 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

* 2019-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.3 லட்சத்து 501 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. 10 லட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

* இன்று தொடங்கும் இந்த 3-ம் மாநாட்டின் மூலம் ரூ.5.50 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படும் என்று தெரிகிறது. இதன் முழுவிவரம் பற்றி நாளை (8-ந் தேதி) நடைபெறும் மாநாட்டு நிறைவுரையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.


Next Story