தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் வாங்கி ரூ.3 கோடி மோசடி
தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் வாங்கி ரூ.3 கோடி மோசடி செய்ததாக ஆண்டிப்பட்டியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
நகைக்கடை உரிமையாளர்
மதுரை தெற்கு ஆவணி மூலவீதியில் வசிப்பவர் வீரமணிகண்டன் (வயது 30). இவர், ஆபரணத் தங்கம் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். மதுரையை சுற்றியுள்ள சில்லறை நகை வியாபாரிகளுக்கு மொத்தமாக தங்க நகைகளை கொடுத்து, அதற்கான தொகையை வசூல் செய்து வந்தார்.
இவர், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நகைக்கடை நடத்தி வந்த முருகபாண்டி (44) என்பவர், கடந்த 2020-ம் ஆண்டு செல்போன் மூலம் என்னை தொடர்பு கொண்டு தனது நகைக்கடைக்கு அழைத்தார். அதன்படி நான் அங்கு சென்றேன்.
நகைகள் வாங்கி மோசடி
அப்போது தனது கடைக்கு தேவையான நகைகளை மொத்தமாக கொடுக்குமாறும், அதனை சில்லறை வியாபாரமாக விற்பனை செய்து பணத்தை கொடுப்பதாகவும் கூறினார். அதை நம்பி அவருக்கு நகைகளை கொடுத்து பணத்தை வசூல் செய்து வந்தேன்.
என்னிடம் இருந்து ரூ.16 லட்சத்து 72 ஆயிரத்து 820 மதிப்புள்ள நகைகளை பெற்றுக் கொண்டு அதற்கான பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்தார். பணத்தை கேட்பதற்காக கடைக்கு சென்றபோது அவரது கடை பூட்டப்பட்டிருந்தது. விசாரித்ததில் அவர் என்னைப் போல் பலரிடம் நகைகளை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.
வெள்ளி பொருட்கள்
அதன்படி நகை வியாபாரிகளான அய்யப்பன், அசோக்குமார், சுரேஷ்குமார், கார்த்திக், கனகராஜ் ஆகியோரிடமும், என்னிடமும் சேர்த்து மொத்தம் ரூ.1 கோடியே 52 லட்சத்து 99 ஆயிரத்து 570 மதிப்புள்ள 2 கிலோ 451 கிராம் எடையுள்ள தங்க நகைகள், ரூ.47 லட்சத்து 65 ஆயிரத்து 870 மதிப்புள்ள 33 கிலோ 321 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்களை வாங்கிவிட்டு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்.
மேலும் அசோக்குமாரிடம் ரூ.27 லட்சத்தை பணமாக பெற்றுக் கொண்டும், மொத்தம் ரூ.2 கோடியே 27 லட்சத்து 65 ஆயிரத்து 440 மோசடி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.
கைது-சிறையில் அடைப்பு
அதன்பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அரங்கநாயகி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த மோசடி தொடர்பாக முருகபாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே முருகபாண்டி நடத்திய நகைக்கடையில் நகைகள் செய்து கொடுப்பதாகவும் சிலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
அதன்படி பாதிக்கப்பட்ட 12 பேர், மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்தனர். அவர்களிடம் மொத்தம் ரூ.99 லட்சத்து 47 ஆயிரம் மோசடி செய்துள்ளதாகவும் முருகபாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த 2 வழக்குகளிலும் முருகபாண்டியை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரை தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.