நாகர்கோவில் ரெயிலில் கடத்திய 1¼ கிலோ தங்கம் பறிமுதல் - வாலிபர் கைது


நாகர்கோவில் ரெயிலில் கடத்திய 1¼ கிலோ தங்கம் பறிமுதல் - வாலிபர் கைது
x

எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு வாலிபர் 1.3 கிலோ தங்கத்தை பிரட் மேக்கரில் மறைத்து கடத்தி வந்தது கண்பிடிக்கப்பட்டது.

திருவனந்தபுரம்,

நாகர்கோவில்-மங்களூரு ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒருவர் தங்கத்தை கடத்துவதாக காசர்கோடு மாவட்ட சுங்க இலாகா சூப்பிரண்டு ராஜீவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் காசர்கோடு ரெயில் நிலையத்தில் அந்த ரெயிலில் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு வாலிபர் 1.3 கிலோ தங்கத்தை பிரட் மேக்கரில் மறைத்து கடத்தி வந்தது கண்பிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் காசர்கோடு செங்கலா பகுதியை சேர்ந்த முகமது பாயிஸ் (வயது33) என்பதும், துபாயில் இருந்து விமானம் மூலம் தங்கத்தை கடத்தி கண்ணூர் வந்து அங்கிருந்து ரெயிலில் சென்றதும் தெரிய வந்தது.

கண்ணூர் விமான நிலையத்தில் இவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கம் போல் சோதனை நடத்தினர். ஆனால் தங்கம் இருப்பதை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன்பின்பு இந்த நபர் தங்கம் கடத்துவது குறித்து காசர்கோடு மாவட்ட சுங்க இலாகா அதிகாரி ராஜீவனுக்கு சிலர் ரகசிய தகவல் கொடுத்தனர்.

அதனை தொடர்ந்து நடத்திய சோதனையில் தான் இந்த தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.76 லட்சம் ஆகும். அத்துடன் தங்கம் கடத்திய முகமது பாயிசை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.


Next Story