அரசு பஸ் - கார் மோதல்; 8 பேர் பலி


அரசு பஸ் - கார் மோதல்; 8 பேர் பலி
x

அரசு பஸ்- கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய 8 பேர் பரிதாபமாக இறந்தனர்.

திருவண்ணாமலை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 11 பேர் நேற்று முன்தினம் ஆயுத பூஜை விடுமுறையையொட்டி புதுச்சேரிக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கருமாங்குளம் பகுதியில் அவர்களது கார் இரவு 9.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ்சும்- இவர்களது காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் பஸ்சில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மேல்செங்கம் போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

8 பேர் பலி

கடப்பாரை உள்ளிட்டவற்றை கொண்டு காரின் முன் பகுதியை உடைத்து அதில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் இறந்து விட்டனர்.

காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மற்றவர்களை போலீசார் மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.

விசாரணையில், உயிரிழந்தவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மாரம்பட்டியை சேர்ந்த டிரைவர் காமராஜ் (வயது 29), கெலமங்கலத்தைச் சேர்ந்த புனித்குமார் (23), அசாம் மாநிலம் சோனபூர் பகுதியை சேர்ந்த எஸ்பின்கோரோ, பிசேஸ்முர்மு, சமோன், ஆராஞ்சி, குண்சராய் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களது உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே 2 மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவரது பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.


Next Story