டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்த கார் மீது அரசு பஸ் மோதல் - 7 பேர் காயம்


டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்த கார் மீது அரசு பஸ் மோதல் - 7 பேர் காயம்
x

திருமங்கலம் அருகே டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்த கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

திருமங்கலம்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்தவர் பரமன்(வயது 38). இவர் சொந்தமாக கார் வைத்து தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் பரமன் இன்று காலை மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட்டு மீண்டும் திருமங்கலம் விருதுநகர் நான்கு வழி சாலை வழியாக சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

காரை அதே ஊரைச் சேர்ந்த மாரீஸ்வரன் (25) என்பவர் ஓட்டி வந்தார். கார் கள்ளிக்குடி அருகே வெள்ளாகுளம் விளக்கு பகுதியில் வந்தபோது திடீரென முன்பக்க டயர் வெடித்தது.

இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்தது. பின்னால் மதுரையிலிருந்து சிவகாசி நோக்கி 64 பயணிகளுடன் வந்த அரசு பஸ் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் இருந்த 2 ஆண்கள் 3 பெண்கள் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

பின்னர், காருக்குள் சிக்கியவர்களை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் டிரைவர் மாரீஸ்வரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story