திருச்சியில் பயணிகளை ஏற்ற மறுத்து குளித்தலைக்கு வந்த அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடிப்பு
திருச்சியில் பயணிகளை ஏற்ற மறுத்து குளித்தலைக்கு வந்த அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பஸ் சிறைபிடிப்பு
திருச்சியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி அரசு பஸ் ஒன்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சம்பவத்தன்று இரவு புறப்பட்டு உள்ளது. அப்போது குளித்தலை பகுதியைச் சேர்ந்த பயணிகள் ஏற முற்பட்டுள்ளனர் அப்போது அந்த பஸ்ஸின் கண்டக்டர் அவர்களை பஸ்ஸில் ஏற்றவில்லை என கூறப்படுகிறது.இதுகுறித்து குளித்தலை பகுதியைச் சேர்ந்த பயணிகள் குளித்தலை பகுதி உள்ள இளைஞர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குளித்தலை பஸ் நிலையத்திற்கு வந்த அந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சியில் இருந்து குளித்தலைக்கு பயணிகளை ஏற்றாமல் வந்த அந்த அரசு பஸ்சை நிறுத்தி சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறிவுரை
பின்னர் இதுதொடர்பாக குளித்தலை அரசு பணிமனை அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பஸ் கண்டக்டரிடம் எந்த நேரத்திலும் பயணிகளை பஸ்சில் ஏற்றவேண்டும் பயணிகளை பஸ்சில் ஏற்றாமல் இருக்கக் கூடாது என தெரிவித்ததோடு அந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர் பெயர் விவரங்களை கேட்டறிந்த பின்னர் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இது தொடர்பாக கரூர் போக்குவரத்து பணிமனை மேலாளருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பஸ்சில் பயணிகளை ஏற்றாத அந்த அரசு பஸ்சின் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சியில் பயணிகளை ஏற்றாமல் வந்த அரசு பஸ்சை குளித்தலையில் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.