பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்- லாரி


பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்- லாரி
x

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு பஸ், லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு பஸ், லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதாள சாக்கடை திட்டம்

நெல்லை மாநகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதில் ஒன்றாக நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு கழிவுநீர் குழாய்கள் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பணிகள் கடந்த சனிக்கிழமை மாலை வரை நடந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லாத வகையில் இரும்பு தடுப்புகள் வைத்து அதில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. பணி முடிந்த பின்னர் சாலையோரம் குவித்து வைக்கப்பட்ட மண், பள்ளத்தில் போட்டு மூடப்பட்டது. பின்னர் அந்த வழியாக கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து பெய்த மழையால் அந்த இடத்தில் மண் சேறும் சகதியுமாக மாறியது.

பள்ளத்தில் பதிந்த அரசுபஸ்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் இருந்து புளியங்குடிக்கு கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது. அந்த லாரி தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில் சென்ற போது அந்த பள்ளத்தில் பின்பக்க சக்கரம் சிக்கியது. இதனால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே நேற்று அதிகாலையில் பெங்களுரூவில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று லாரி பள்ளத்தில் சிக்கி இருப்பதை பார்த்து சாலையோரமாக டிரைவர் பஸ்சை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக அரசு பஸ்சும் பள்ளத்தில் சிக்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர்.

அரசு பஸ்-லாரி மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்த தச்சநல்லூர் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் மாற்று பஸ்சில் பயணிகளை அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் பொக்லைன் மற்றும் கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி, பஸ் மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் சிமெண்டு கலவை போடும் பணி நடந்து வருகிறது.


Next Story