நடுவழியில் பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள்
ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அரசு பஸ்கள் நடுவழியில் பழுதாகி நிற்பதால், பயணிகள் பரிதவிக்கின்றனர்.
ஊட்டி
ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அரசு பஸ்கள் நடுவழியில் பழுதாகி நிற்பதால், பயணிகள் பரிதவிக்கின்றனர்.
அரசு பஸ்கள்
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி-1, ஊட்டி-2, கூடலூர், கோத்தகிரி, குன்னூர், மேட்டுப்பாளையம்-2 ஆகிய 6 போக்குவரத்து பணிமனைகள் உள்ளது. இங்கிருந்து கிராமப்புறங்கள் மட்டுமின்றி திருச்சி, மதுரை, திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற வெளிமாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கும் என 270 வழித்தடங்களில் 335 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சராசரியாக 1½ லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணிக்கின்றனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.38 லட்சம் வசூலாகிறது.
மலைப்பிரதேசத்தில் குறுகலான சாலைகள் வளைந்து, நெளிந்து செல்லும் மலைப்பாதைகளில் அரசு மினி பஸ்களும் இயக்கப்படுகிறது. இதற்கிடையே பல பஸ்களில் மேற்கூரை போதிய பராமரிப்பின்றி உள்ளது. இதேபோல் பல்வேறு பஸ்களும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் பயணிகளுடன் செல்லும்போது நடுவழியில் பழுதடைந்து நின்று விடுகிறது.
நடுவழியில் நின்றன
இந்தநிலையில் நேற்று காலை பொள்ளாச்சியில் இருந்து கூடலூர் நோக்கி வந்த அரசு பஸ் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை முதல் கொண்டை ஊசி வளைவில் பஞ்சர் ஆகிவிட்டது. இதேபோல் கூடலூரில் இருந்து பாலக்காடு செல்லும் அரசு பஸ் பர்லியார் பகுதியில் பஞ்சர் ஆகி நடுவழியில் நின்றது. அரசு பஸ்சில் இருந்து டயரை கழற்ற முயற்சித்த போது, அதிலிருந்து டயரை கழற்ற முடியாத அளவுக்கு லாக் ஆகிவிட்டது. பெரும்பாலான பஸ்களில் இதே நிலைதான் நீடிக்கிறது. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
அடிக்கடி பஸ்கள் பழுதாகி நின்று விடுவதால், பயணிகள் பாதி வழியில் கீழே இறங்கி வேறு பஸ்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, அரசு பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பயணிகள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
பராமரிக்க வேண்டும்
திருப்பூரை சேர்ந்த பயணி விஜயா:-
நீலகிரியில் அரசு பஸ்களில் சரியான பராமரிப்பு இல்லை. குறிப்பாக டயர்கள் நிலைமை படுமோசமாக இருக்கிறது. இதனால் அவ்வப்போது பஞ்சர் ஆகி நடுவழியில் பஸ்கள் நின்று விடுகிறது. இதேபோல் பின்னால் வரும் மாற்று பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருப்பதால், குறிப்பிட்ட நேரத்தில் கோர்ட்டு, தேர்வு அறை, பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் அந்த வேலைகளை தவற விடுகின்றனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த கோபிநாத்:-
நான் நண்பர்களுடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்தேன். வரும் வழியில் மட்டும் 3 இடங்களில் அரசு பஸ் பழுதாகி நடுவழியில் நிறுத்தப்பட்டதால், பின்னால் வந்த பஸ்களில் பயணிகள் ஏற்றப்பட்டனர். இதனால் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். செல்போன் சிக்னல் கிடைக்காத இடங்களில் பஸ் நிற்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே, அரசு பஸ்களை பராமரிப்பதில் அதிகாரிகள் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.