பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்; குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்; குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x

பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று நெல்லையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருநெல்வேலி

பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று நெல்லையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், வேளாண்மை இணை இயக்குனர் முருகானந்தம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கானார்பட்டி ஆபிரகாம்:- விவசாயிகள் தங்கள் பெயர்களை காப்பீடு செய்ய பயிர் காப்பீடு திட்டத்தில் பணம் செலுத்துகின்றனர். ஆனால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி காப்பீட்டுத் தொகையை வழங்காமல் தட்டிக் கழிக்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் இழப்பீடு ஏற்படுகிறது. எனவே பயிர் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

கலெக்டர்:- விதிகளின்படி அதற்கான காலம் 4 மாதங்கள் வரை ஆகும். விவசாயிகள் கோரிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.

இதைத் தொடர்ந்து விவசாயிகள் பேசுகையில், "வாழைக்கு இழப்பீடாக 2 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் எந்த பயனும் இல்லை. ஒரு நாளைக்கு 15 ரூபாய் செலவாகிறது. எனவே இதுதொடர்பாக அரசு ஆணையை மாற்ற வேண்டும்" என்றனர்.

கங்கைகொண்டான் பகுதியில் மான்கள் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்கிறது. இதுதொடர்பாக வனத்துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

உள்ளூர் மக்களுக்கு

அம்பை சொரிமுத்து:- வடக்கு கோடை மேல் அழகியான் கால்வாயில் கைப்பிடி சுவர் கட்டித்தர வேண்டும். அகஸ்தியர் அருவிக்கு செல்ல கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும்.

அதற்கு வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "அகஸ்தியர் அருவிக்கு செல்பவரிடம் ரூ.30 கட்டணம் வசூலிப்பதாகவும், கோவிலுக்கு செல்பவரிடம் கட்டணம் வசூலிப்பதில்லை என்றும் கூறினார்கள்.

உடனே கலெக்டர், "கோவிலுக்கு செல்பவர்கள், அருவிக்கு செல்பவர்கள் என எப்படி அடையாளம் காண்பீர்கள். உள்ளூர் மக்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி செயல்படுங்கள். சட்டப்படி செயல்படுங்கள். மேலும் கங்கைகொண்டான் பகுதியில் விளைநிலங்களில் மான் புகுந்து அட்டகாசம் செய்வது குறித்து அதிகாரிகள் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும்" என்றார்.

பாப்பாக்குடி அருகே குளத்தில் வீடு கட்டி ஆக்கிரமிப்பதை தடுப்பதுடன் போலியாக பட்டா வழங்கியதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினார்கள்.

கலெக்டர்:-நெல்லை நீர்வளம் மூலம் அனைத்து குளங்களும் மேப்பின் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பு என புகார் வந்தால் எத்தனை முறை சென்று அளப்பீர்கள். அரசாணைப்படி வருவாய்த்துறையும், பொதுப்பணிதுறையும் கூட்டு புலத்தணிக்கை செய்து ஆக்கிரமிப்பு இருக்கிறதா இல்லையா என்று பதில் தெரிவிக்க வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் 62 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 31,259 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான தொகை ரூ.68 கோடியே 81 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதி தொகை விரைவில் செலுத்தப்படும். விவசாயிகள் 619 குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வீசிய சூறாவளி காற்று காரணமாக நெல்லை மாவட்டத்தில் 10.235 ஹெக்டேர் வாழை சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து அரசுக்கு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story