வழிபாட்டு முறைகளில் அரசு தலையிடக்கூடாது-எடப்பாடி பழனிசாமி பேட்டி


வழிபாட்டு முறைகளில் அரசு தலையிடக்கூடாது-எடப்பாடி பழனிசாமி பேட்டி
x

மத விவகாரங்கள், வழிபாட்டு முறைகளில் அரசு தலையிடக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று தருமபுர ஆதீன மடாலயத்திற்கு வருகை தந்தார். அப்போது மடாலய வளாகத்தில் வளர்க்கப்பட்டு வரும் ஒட்டகத்திற்கு உணவாக இலைக் கொத்துக்களை வழங்கினார்.தொடர்ந்து தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது. அதற்கேற்ப புதிய கட்டிடங்கள் கட்ட தேவையான இடம் தருமபுரம் ஆதீனம் சார்பில் வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக ஒப்பந்தம் போடப்பட்டது. அதை தடுத்து நிறுத்துவதற்காக சட்டப்போராட்டம் நடத்தியது அ.தி.மு.க. அரசு. பின்னர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளித்ததும், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த காவிரி நதி நீர் பிரச்சினையை தீர்த்து வைத்ததும், தூர் வாரும் பணிகளை முழுமையாக செயல்படுத்தியதும் அ.தி.மு.க. அரசுதான்.

அரசு தலையிடக்கூடாது

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு ஆய்வு நடத்துவது தொடர்பான முழு விவரங்கள் கிடைத்த பின்னரே அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும். எல்லா மதங்களையும் சமமாக பார்க்க வேண்டும். மத விவகாரங்களில், ஆண்டாண்டு காலமாக பின்பற்றும் வழிமுறைகளில் அரசு தலையிடக்கூடாது. ஆதீனங்களில் திட்டமிட்டு இந்த அரசு மூக்கை நுழைக்கப் பார்க்கிறது. இது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து ஆண்டாண்டு காலமாக பட்டினப்பிரவேசம் நடந்து கொண்டு இருக்கிறது. அதை வேண்டுமென்றே தி.மு.க. அரசு தடை செய்தது. பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்த காரணத்தால் அரசு அனுமதி அளித்தது.

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள்

தமிழக அரசு முறையாக நெல் கொள்முதல் செய்யவில்லை. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லையும் பாதுகாக்கவில்லை. இந்த அரசு செயலற்ற அரசாக உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உரத்தட்டுப்பாடு ஏற்படாதவாறு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டது. தி.மு.க. அரசு எதையும் செய்யவில்லை. ஏனெனில் தமிழக முதல்-அமைச்சருக்கு விவசாயத்தை பற்றியும் தெரியாது, நாட்டைப் பற்றியும் தெரியாது. தனது வீட்டைப் பற்றி மட்டும்தான் தெரியும். அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் அ.தி.மு.க. அரசால் தொடங்கப்பட்ட திட்டம் என்பதற்காகவே அதை முடக்கினார்கள். அ.தி.மு.க. உள்ளிட்ட பொதுமக்கள் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் அது தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆட்சி இருந்தால்...

பட்டினப்பிரவேசம் தொடர்பாக வருங்காலத்தில் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று அரசு கூறியுள்ளது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு 'ஆட்சி இருந்தால் பார்த்துக் கொள்ளலாம்' என்றார்.பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, முன்னாள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.






Next Story