அண்ணாமலை சொல்வதைக்கேட்டு கவர்னர் செயல்படுகிறார்: காதர் மொய்தீன் குற்றச்சாட்டு


அண்ணாமலை சொல்வதைக்கேட்டு கவர்னர் செயல்படுகிறார்: காதர் மொய்தீன் குற்றச்சாட்டு
x

பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை சொல்வதைக்கேட்டு தான் கவர்னர் செயல்படுகிறார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் குற்றம் சாட்டினார்.

கரூர்

பேட்டி

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நாங்கள் அதற்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம். வரும் தேர்தலிலும் தி.மு.க.வை சிறப்பாக செயல்பட்டு வெற்றியடையச் செய்வோம். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம். எடப்பாடி பழனிசாமி, இந்தியா கூட்டணி, பாரதீய ஜனதா கூட்டணியில் கிடையாது. அ.தி.மு.க. இந்தியா முழுவதும் பெரிய கட்சியாக இருக்கிறது என்று யாரும் கூறவில்லை. அதற்கு எடப்பாடி பழனிசாமி தான் பதில் கூற வேண்டும்.

அண்ணாமலை கவர்னரா?

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க கவர்னர் கையெழுத்திடவில்லை. நாங்கள் கையெழுத்து இடமாட்டோம் என பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை அடிக்கடி கூறுகிறார். இதனால் தமிழகத்திற்கு அண்ணாமலை கவர்னரா? அல்லது ஆர்.என்.ரவி கவர்னரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அண்ணாமலை சொல்வதைக் கேட்டு தான் கவர்னர் செயல்படுகிற நிலைமை உள்ளது. கவர்னர் பதவி என்பது இரட்டை ஆட்சிக்கு உட்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 49 பேர் விடுதலை தொடர்பாக கவர்னரை பார்க்க உள்ளோம். அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய மந்திரி அமித்ஷாவை பார்ப்போம்.

இஸ்ரேல் பிரச்சினை

கவர்னர் தனக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாக நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். இதனால் அவர் கூடிய விரைவில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவரை மாற்றும் இடத்திற்கு இந்தியா கூட்டணி வரும். இஸ்ரேல், ஹமாஸ் பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கு அங்குள்ள மக்கள் அனைவரும் அண்ணன், தம்பி போல் வாழ்வதற்கான வழிமுறைகளை கண்டறிந்து உதவ வேண்டும் என்று நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அதே நடைமுறைதான் ஐ.நா. சபையிலும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story