பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் -தமிழக அரசு தகவல்


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் -தமிழக அரசு தகவல்
x

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது.

சென்னை,

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே உள்ள மூல சட்டத்தில், தேனி வளர்ப்பு, கால்நடை பாதுகாப்பு, உள்நாட்டு மீன்வளர்ப்பு ஆகிய பிரிவுகளையும் சேர்க்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. மேலும், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல ஆணையத்தை முதல்-அமைச்சரை தலைவராக கொண்டு அமைக்க வேண்டும் என்றும், அதில் நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகளை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

அதோடு, மயிலாடுதுறை மாவட்டத்தை வேளாண் மண்டலத்தில் இணைத்து சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அந்த மசோதாவில் கூறப்பட்டு இருந்தது. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30-ந் தேதி சந்தித்து, ஒப்புதல் கிடைக்காமல் நிலுவையில் இருக்கும் சட்ட மசோதாக்கள் பற்றி பேசினர்.

இந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Next Story